தோழமைகளே இதை வாசியுங்கள்

வினா-அகன்:
விடியும் பொழுதுக்கு
என்ன சொல்லி
விடை பெற்றிருக்கும் இரவு..?
விடை-மரபுமாமணி:
குளிரவைத்துத் தூங்க வைத்தேன்;
காய்ந்தெரித்து எழுப்பிடாதே கதிரே!

வினா-அகன்:
மலர்ந்து உதிரும் மலரிதழ்கள்
என்ன சொல்லி
செடியிடம் விடை பெற்றிருக்கும்..?
விடை-மரபுமாமணி:
சிரிப்பின் மணம்கூட்டிச்
சிறப்பாக வாழ்ந்து விட்டேன்
விரிப்பாய் நடப்போர்க்கும்
வேதனைகள் நீக்கிடுவேன்;
பொறுப்பாய் எனைப்போன்ற
பிள்ளைகளே நீ அனுப்பு!

வினா-அகன்:
உயிர் எதைக் கூறிவிட்டு
விடை பெற்றிருக்கும்
உடலிடமிருந்து..?
விடை-மரபுமாமணி:
ஆற்றல் எதுவென்று
அடையாளம் காட்டிவிட்டேன்!
போற்றுவார் என்னோடும்
உன்னையுமே புகழுவார்;
தேற்றி அடங்கிவிடு
தெளியட்டும் உலகிதனை!

வினா-அகன்:
மேலே என்ன சொல்லிவிட்டு
கீழியிறங்கிருக்கும் மழைத்துளிகள்..?
விடை-மரபுமாமணி:
வானத்தில் ஏறி வலம்வந்தேன்
வறண்ட இடங்களைத்தான் அறிந்திடவே!
தானத்தின் சிறப்புலகு
தானறிய இறங்குகிறேன்
மானத்தை, மகிழ்ச்சியினை
மறக்காமல் கூட்டிடுவேன்!

வினா-அகன்:
நிலா இல்லாதபொழுது
விண்மீன்களிடம்
என்ன சொல்லியிருக்கும் வானம்..?
விடை-மரபுமாமணி:
கூடாய் நானுள்ளேன்
குஞ்சுகளே வீணாகத்
தேடும் கண்சிமிட்டித்
தேடாதீர் தாய் நிலவை!
பாடும் முடித்தவளாய்ப்
பாய்மரமில் லாப்படகாய்
ஓடி வந்திடுவாள்
உம்பசியைப் போக்கிடுவாள்!

வினா-அகன்:
ஊழல் புரிபவனின் உள்மனம்
என்ன சொல்லிக் கொண்டிருக்கும்
சிக்கிடும் போது..?
விடை-மரபுமாமணி:
உதவிதான் நான்செய்தேன்!
உதவிதான் அவர்செய்தார்!
ஒருவர் கஷ்டத்தை
ஒருவர் போக்கினோம்
ஊழல் எதுவென்று
உணர்த்திடுங்கள்
தெரிந்து கொள்வேன்!

வினா-அகன்:
சரியில்லாதவனுக்கு
வாக்காளன் வாக்களிக்கும் போது
வாக்குச்சீட்டு என்ன சொல்லியிருக்கும்..?
விடை-மரபுமாமணி:
முதுகில் குத்தியவனை
முகத்தில் குத்துவதாய் நினைத்தாயோ?
முட்டாளென்று
முதலிலேயே உன்விரலில்
முத்திரை குத்தியிருப்பார்களே!

வினா-அகன்:
எழுதிமுடிக்கப்பட்ட எழுத்துகள்
விரல்களிடம்
என்ன சொல்லி நீங்கியிருக்கும்...?
விடை-மரபுமாமணி:
எழுது எழுது என்று
வந்து விழுந்ததே நான்தான்!
எழுதிவிட்டாய்!
என் ஏக்கம் தீர்ந்துவிட்டது..
இனி
ஏக்கம் உன்பாடு
இயக்கம் படிப்பவர்கள் பாடு!


அன்பானவர்களே கவிதை என்பது எவருக்கும் தோன்றும்...ஊறும்...அன்றியும் ஒரு தலைப்பின் கீழ் படைப்பது என்பது பயிற்சியின் விளைவெனில் சிறப்பு அதிகம்..இவ்வகையில் ஒரு முயற்சி - இந்த வினா விடை படைப்பு...

முக்கிய குறிப்பு :
மரபுமாமணியும் நானும் முன்கூட்டி இது குறித்து எந்தவொரு முன் உரையும் நிகழ்த்திக் கொள்ளவில்லை என்பது முக்கியமாக தோழமைகள் உணர்தல் நன்று...

அன்புடன் அகன் -மரபுமாமணி...

எழுதியவர் : அகன் -மரபுமாமணி (17-Nov-13, 8:58 pm)
பார்வை : 81

மேலே