தாயே உனக்காக

சிறகடிக்க விட்ட சிறந்தவளே -எனை
சீராட்டி வளர்த்த தாயவளே
பாலூட்டி வளர்த்தவர் மத்தியிலே -எனை
பாராட்டியே வளர்த்த பெற்றவளே!

ஆசானுக்கே ஆசானாய் இருந்தவளே
ஆசைகளை ஆசையாய் தீர்த்தவளே
நடமாடும் வியப்பாய் திகழ்ந்தவளே
நட்போடு நட்பாய் கலந்தவளே!

ஒளிமறந்து இருளதனில் தவிக்கையிலே
வழிமறந்து விழிததும்பி துடிக்கையிலே
கைக்கோர்த்து கண்துடைத்த மருந்தவளே
கரம்பிடித்து கரைசேர்த்த ஈன்றவளே!

வலிமறந்து வழியறிந்தேன் உன்னாலே
உனதன்பு எனைத்தொடரும் பின்னாலே
அதட்டலோடும் அன்போடும் நீ சொன்னாலே
என்தலை மட்டும் தலைவணங்கும் தன்னாலே!

நீயில்லையெனில் இந்நிலை எனக்கில்லையே
நீயில்லாத வாழ்வில் வழியில்லையே
நிகரேதும் இங்கு உனக்கில்லையே
நின்னை மறந்தால் நான் அழகில்லையே!

வெற்றியதன் முதற்படியை தொட்டேனே
உன் உச்சிதனை குளிந்திட வைத்தேனே
களிப்போடு உனைக் கட்டியணைத்தேனே
மகிழ்வோடு முத்தமு மிட்டேனே!

எழுதியவர் : தமிழின் மகள் ஹேமலதா (18-Nov-13, 11:08 am)
பார்வை : 152

மேலே