மேகத்தாயின் மழைக் குஞ்சு…

வானமும் கடலும் கூடி கருத்தரித்த மழைக்குஞ்சு, மேக வயிற்றினிலே தவழுகிறாள்
காலமும் நேரமும் கூடி வர கர்பவலியில் அலறுகிறாள் அழுகையுடன் இடியாக
இடைக்கிடையில் மின்னலாய் வந்து போகும் அவளின் அழகான இடை அழகு
பிள்ளைப் பேறு காலம் வந்தவுடன் கறுப்புக்கொடியுடன் சலசலப்பு உலகமெங்கும்

மெதுவாய் ஒவ்வொன்றாய் உதிருகின்ற மழைக்குஞ்சு தென்றலுடன் விளையாடும்
மேக வயிறும் சூரிய சத்திரசிகிச்சையினால் கிழிக்கப்பட்டு சோவெனக் கொட்டும் குஞ்சுகள்
ஒன்றா இரண்டா.. பல கோடிக் குஞ்சுகள் பாரெல்லாம் பரந்தோடும் பாரபட்சமின்றி
சிப்பிக்குள் விழுந்த குஞ்சு முத்தாக.. மனித தலையில் விழுந்த குஞ்சு ஜலதோசமாக..

வாய்திறந்த நிலமதிலே தாய் திறந்த சேயாக குஞ்சுகள் குப்புற விழுந்தாலும்
உறுஞ்சிய நிலமதுவும் உள்ளமதில் சேர்த்து வைத்து கொடை கொடுக்கும் மரங்களுக்கு
சேர்த்து வைத்த குஞ்சுகளும் ஆர்ப்பரித்து சுதந்திரமாய்க் கொப்பளிக்கும் வெள்ளமாக
பள்ளங்கள் நோக்கி கள்ளமின்றி கரைபுரளும் கண்டதையும் கட்டியணைத்து.

குளம்களும் தன் உயரம் அதிகரித்து அணைக் கட்டுகளை அணைத்து நிற்கும்
மீன்குஞ்சும் மழைக் குஞ்சும் காதலித்து இனம் பெருக்கும் உயிர் ஜீவன்களை
இறுதியாய் விடை பெறும் மழைக் குஞ்சும் தன் பழைய வாழ்விடம் தேடி
யதார்த்தம் உணர்ந்ததனால் கடல் நோக்கி நகரும் ஆற்றுப்பெருக்காக

மேகமும் தயாராகும் கடலோடு சேர்ந்து மீண்டும் மழைக் குஞ்சை கருத்தரிக்க
மனிதனோ நாமும் தயாராவோம் நம் கழிவுகளை கடலில் சேர்க்க..

அன்புடன் தாஸீம்

எழுதியவர் : கல்முனையான் (19-Nov-13, 2:16 pm)
பார்வை : 81

மேலே