எது அழகின் சிரிப்பு

எது அழகின் சிரிப்பு?
[ கண்ணோட்டம் என்னும் கழிபெரும்
காரிகை
உண்மையான் உண்[டு]இவ் உலகு.
திருக்குறள் 0571 ]
பிச்சைக் கிழவன் பக்கத்[து]
இருந்த தெருநாய்க்[கு]
எச்சில் இலையின் சோற்றை
எடுத்துக் கொடுத்தே
இச்சை உடனே சாப்பி[டு]என்று
இசைத்தபோது மலர்ந்த
பச்சைச் சிரிப்பே உச்சமான
அழகின் சிரிப்பு---
காதுகள் பஞ்[சு]அடைக்கக் கால்கள்
பின்னலிடப்--பசியின்
தூதுவர் போல்வந்த முதுவருக்குக்
கைக்காசு அனைத்தையும்
செருப்புத் தைக்கும் அந்தநல்ல
உழைப்பாளி கொடுத்துவிட்டுச்
சிரித்த சிரிப்பே, சிறப்புக்[கு]உரிய
அழகின் சிரிப்பு---
காலது ஊனமான மேலான
கடைமைப் போராளி,
பேருந்தி லிருந்து இறங்கித்
தள்ளாடி நடந்தே
அலுவலகம் வந்[து]அவர் இருக்கையில்
அமர்ந்து சிறிதும்
அலுக்காது சிரித்தஅச் சிரிப்பே,
அழகின் சிரிப்பு---
மனிதக் கழிவுகளை மயக்கம்இன்றி
அள்ளி எடுத்துப்
புனிதப் பணியினை முழுதும்
முடித்தபின் நடந்து
வீடு திரும்பும் வேளையில்
காட்டும் புன்சிரிப்பே
நாடு போற்றத் தக்கநல்ல
அழகின் சிரிப்பு---
விபத்தில் சிக்கி விழுந்து
கிடந்த ஒருவரை
விரைந்தே எடுத்துத் தோளில்
போட்டுக்கொண்[டு] ஓடி
மருத்துவ மனையில் சேர்த்தவர்
தோளில் நிறைந்[து]இருந்த
குருதிக் கறைகளே குறையாத
அழகின் சிரிப்பு---
குருதி இழப்பால் தவித்த
ஒருவருக்குத் தமது
குருதியைக் கொடுத்த பின்னர்,
இனிஅவர் பிழைப்பது
உறுதிஎன்று உணர்ந்[து]உளம் மகிழ்ந்து
சிரிக்கும் அந்தச்
சிரிப்பே ஒப்புரவான அருமையான
அழகின் சிரிப்பு---
அறுவையை அருமையாய் முடித்த
மருத்துவர் முகத்தில்
அரும்பும் புன்னகை விரிப்பே
அழகின் சிரிப்பு---
உழைப்பாளி தன்உடல்மேல் அழகாய்
உட்கார்ந்[து] இருக்கும்
பிழைஇலா வியர்வைத் துளிகளே
அழகின் சிரிப்பு----