சொல்லும் செயலும்

சொல்லும் செயலும்
[ கனவினும் இன்னாது மன்னோ
வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
திருக்குறள் 0819 ]
மனித நேயத்தை
மாணவனுக்குக் கற்பித்த
மதிப்பிற்கு உரிய ஆசிரியர்,
கவனிக்காத அவனை--நன்கு
"கவனித்தார்" பிரம்பால்---
மயங்கி விழுந்தது
மனித நேயம்---
மறதி ஒழிப்புப் பற்றி
உரையாற்ற வந்தவர்,
மேடை ஏறியதும்
மீண்டும் ஒருமுறை
கேட்டுக் கொண்டார்,
"பேச வேண்டிய
தலைப்பு எது"என்று---
"நேரம் தவறாமை" பற்றிப்
பேச வேண்டிய பெருந்தகை,
மேடை நோக்கி வேகமாக
ஓடோடி வந்தார்
மூன்று மணிநேரம்
ஓடிய பின்னர்---
"நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்"என்று
அருமையாக முழங்கியவர்,
அரைமணி நேரத்தில்
ஆறுமுறை இருமிக் கொண்டார்---
வானுயர்ந்த மரங்களை
வீழ்த்தி அமைத்த--அந்த
மேடையில் நின்று
மாண்புமிகு ஒருவர்,
நீட்டி முழக்கினார்,
"வீட்டுக்கு ஒருமரம்
வளர்த்தால்,
நாட்டுக்கு நல்லது"---