ஓசை

சற்று முன் மழை பெய்து நின்று போன ஒரு பின் மாலை வேளை அது. மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்ற நான் பாதி நனைந்தும் நனையாமலும் என் கிராமத்துக்கான பேருந்து செல்லா ஒற்றையடிப்பாதையில் மெல்ல நடக்கிறேன்.

மரங்கள் எல்லாம் மழை வாங்கிய சந்தோசத்தைத் தன் இலைகளில் தேக்கிவைத்து என்னைக் கொஞ்சம் உலுக்கேன்; நான் ஒரு மழை பெய்கிறேன் என்று கொக்கி போட்டு இழுத்தன என்னை... சேறும் சகதியுமான என் ஊருக்கான வழி 50 வருடங்களாய் இப்படித்தான் இருப்பதாக ஊர் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.....

மழை நின்று விட்டது. வெளியே போவோமா அல்லது வேண்டாமா என்ற சர்ச்சையில் மரங்களில் இருந்த காக்கைகளும் குருவிகளும் கிளிகளும் கூச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் இருட்டத் தொடங்கியிருந்ததுதான் என்பது எனக்கும் அவற்றுக்கும் நன்றாகவே தெரியும். புற்கள் எல்லாம் புதுமணப்பெண்ணாக மழைத்துளியை வாங்கிச் சிலிர்த்து வெட்கத்தோடு ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டிருந்தன....

மண்ணின் வாசம் எல்லாவற்றையும் தாண்டி என்னுள் அடாவடியாய் உள் நுழைந்ததோடு சுற்றியிருந்த தாவரங்களின் பச்சைப் பசுமையின் வாசமும் ஒரு மாதிரி உள் சென்று கிலேசத்தைக் கொடுத்த அந்த நொடியில் மூர்ச்சையாவதற்குச் சமமாய் ஒரு மனோ நிலையில் நான் கிடந்த போது அந்த சில் வண்டின் சப்தத்தை மூளை கவனிக்கத் தொடங்கியிருந்தது.....சுகமாய் எங்கிருந்தோ ஒரு அதிர்வினை பரப்பும் சில்வண்டுகள் மோன நிலையிலேயே இருக்குமோ என்று கூட நினைத்தது உண்டு.....

ஊதக்காற்று என் உடை தாண்டி உடல் சென்று உள் எலும்புகளை நொறுக்கிப் போட்டுக் கொண்டே இருந்தது நானும் அதைக் காதலோடு உள்வாங்கி அசை போட்டுக் கொண்டே நடந்தேன்.......

ஊருக்கு வருகிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை திடீரென்று முடிவு செய்து தடாலென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் கிளம்பும் போதே அம்மா அப்பாவிடம் வேறு எங்கோ போகிறேன் என்று சொல்லிவிட்டு என் சொந்த கிராமத்திற்கு அதுவும் யாருமில்லாமல் பூட்டிக்கிடக்கும் என் பூர்வீக வீட்டிற்கு....இதோ மழையோடு, காற்றோடு, சேறோடு, சகதியோடு, பறவைகளின் பேச்சோடு... மருது சீமையின் மண்ணில் கருவை மரங்களின் உரசலோடு .... நடந்து கொன்டிருக்கிறேன்...! ஒரு விசயம் நான் செருப்பைக் கழட்டிப் பையில் வைத்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்...

ஆனால் இன்னும் நான் எதிர்பார்த்தது போல ஒருமுறை கூட என்னை முத்தமிடாமல் ஒதுங்கிக்கிடந்தன முட்கள்...இப்போதோ அப்போதோ எப்போதோ குத்தும் ஏதாவது ஒரு முள் என் பாதங்களில் அப்போதுதான் நான் அந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் என்பதை என்னால் அனுபவிக்க முடியும்

அதுவும் முள் குத்தும் அந்த ஒரு நிமிடம் சுரீரென்று ஒரு வலி பாதத்தில் இருந்து பரவி உடல் முழுதும் தாக்கி ஒரு வித வேதனை என்று மனம் அதை நம்ப வைக்கும். அந்த நொடியில் நாம் அனிச்சையாய் நிதானிக்க வேண்டும். ஆமாம் வலி என்பது அப்போது மாறி ஒரு சுகானுபவம் வாய்க்கும் நமது உற்று நோக்கலில்.....அதுவும் குத்திய முள்ளை மெல்ல உடல் விட்டு அகற்றும் அந்த நொடியில் குபுக்கென்று பொட்டு ரத்தம் வெளியே வந்து சொந்த மண்ணை எட்டிப்பார்க்கும் அதே வேகத்தில் தரையில் கால் வைத்து தேய்த்து மண்ணோடு இரத்தம் சேர்த்து அழுந்த வலியை உள்வாங்கிக் கொள்ளும் சுகம்.....என்னவென்று அப்படி செய்தவர்களுக்கும் எனக்கும் தெரியும்.......


200 வீடுகள் கொண்ட ஒரு உலகத்திற்குள் நுழையும் முன்பே அப்பத்தா தாத்தாவின் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டன.... ஆமாம் இப்போதான் வீட்டுக்கு சிமிண்ட் பூசினோம்(1993) அதுக்கு முன்னால் சாணம் மொழுகி மொழுகி அப்படித்தான் இருக்கும் வீடு...சாணம் மொழுகிய பின் ஒரு வாசம் வீடு முழுதும் இருக்கும். மண் தரையும் மண்பானை பாத்திரங்களும் மிகுந்த ஒரு வீட்டில் ஒரு கலாச்சார வாசம் அடித்துக் கொண்டே இருக்கும்....

மின்சாரம் இல்லாத நாட்களில் நிறையவே உயிரோட்டமான வாழ்க்கை இருந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அரிக்கேன் விளக்கும் காண்டா விளக்கும் வீடு முழுதும் பரவியிருக்க அடுப்பில் சுள்ளிகள் (முள்ளு விறகு) வச்சி அப்பத்தா சமைக்கிற அழகும் அதுவும் அந்த ஊதாங்குழல் வச்சு ஊதி ஊதிக் கங்குகளைப் (நெருப்புத்துண்டு) பற்றவைக்கும் அழகும் அந்த நெருப்பு வெளிச்சத்தில் மின்னும் அவளது தண்டட்டியின் பளபளப்பும்....

ஆத்தாடி.....சொல்லவே முடியாத ஒரு குறுகுறுப்பு இப்பவும் நெஞ்சுக்குள்ள இருக்கத்தான் செய்யுது...! வாழ்க்கையை நிறையவே தொலைத்திருக்கிறொம் என்பது மெலிதாக உணர முடிந்தது. அறிவியல் வளர்ச்சியும் நவீனமும் மனிதத்தைப் பொசுக்கி இருக்கின்றன....

கல்லாங்காய் ஆட்டமெங்கே? கிளிக் கோடு எங்கே? சில்லுக் கோடு எங்கே? கிட்டிப்புல் எங்கே? ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டு எங்கே? கல்லா மண்ணா எங்கே? திருடன் போலிஸ் விளையாட்டு எங்கே? கண்ணாமூச்சி ரே ரே காதடைப்பார் ரே ரே எங்கே எங்கே? ஈர்க்குச்சி விளையாட்டு எங்கே? சைக்கிள் பழகும் சிறுவர்கள் எங்கே? கதை சொல்லும் அக்காக்களும் அம்மாக்களும் எங்கே? மழை எங்கே? மழையின் பொரி அரிசி எங்கே? அவிச்ச கடலை எங்கே..................

எங்கே என் வாழ்க்கை? எங்கே என் கூட்டம்? எங்கே என் மனிதர்கள்? மனிதனின் முகம் காணா எந்திரங்களோடு தொடர்பு கொண்டு திருப்தியடையும் மூளைக்காட்சிகள் என்னும் மைண்ட் இலூசனில் வாழும் கற்பனை வாழ்க்கையாய்ப் போய்விட்டதே....எமது வாழ்வும் விழாக்களும் சந்தோசங்களும்.....

நேரே பார்க்கும் நண்பனைச் சாட்டுக்கு வாடா பேசலாம் என்று சொல்லும் ஒரு பாழாய்ப்போன பித்து மனோ நிலைக்கு வந்துவிட்டதே எம் உலகம்......!

நான் யோசனைகளோடு நடந்து கொண்டிருந்தேன்....ஊர் எல்லையில் ' ஏப்பு நடந்தா வாரீக... மழைத்தண்ணியாவுல இருக்கு ? ஒத்தையில் வாரீகளே அய்யாவும் ஆத்தாவும் வரலயா? வார்த்தைகளில் பாசம் தடவினார் ஒத்த வீட்டுக் கண்ணப்பன் அண்ணன்...

'இல்லண்னே சும்மாத்தேன் வந்தேன்' மறுமொழியோடு அவரது வீடு கடக்கையில் ஆடுகளின் வாசமும் அவற்றின் இரைச்சலும் தாண்டி அவரது மாடு சப்தமிட்டு என்னை வேகமாய் வரவேற்றது....

ஆசையோடு ஒரு கருவை முள் என் சட்டை பிடித்து இழுத்து 'ஏஞ்சே எப்பஞ்சே வந்த'ன்னு ஒரு பாசத்தைக் காற்றாக மாற்றி என்னைத் தடவியது.....

இதோ என் பூர்வீக வீடு....பூட்டுக்களையும் சில நூற்றாண்டு வாழ்க்கையையும் தாங்கியபடி.....

எதிர்வீட்டு அத்தை அப்பாவின் அக்கா... அப்பு என்ன ஒத்தையில் வந்துருக்கீகா..னு கண்டாங்கிச் சீலை தடுக்க கீழே விழுந்து விடுவது போல ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டு இரத்த பாசத்தை முத்தமாகக் கொடுத்து ....குடும்ப விசயங்களைப் பேசிவிட்டு .. காபி எடுக்க அவர் வீட்டுகுள் நுழைய....

நான் அப்பாவிற்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த வீட்டின் சாவியைப் பூட்டுகுள் கொடுத்து முடுக்க...பூட்டு சந்தோசமாய் விலகி என்னைப் பார்த்துச் சிரித்தது.....

நிசப்தமாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.....!

வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் மறந்து போன அழகான ஓசைகள் ஆயிரம் இருக்கும்...! என் மெளனங்கள் எல்லாம் இப்படிப்பட்ட ரம்யமான ஓசைகளால் தான் நிரம்பியிருக்கிறது....

எழுதியவர் : Dheva.S (19-Nov-13, 9:36 pm)
Tanglish : oosai
பார்வை : 215

சிறந்த கட்டுரைகள்

மேலே