சாதியே ஏன் பிறந்த

எங்கேயோ பிறந்திட்டோம்
யார் யாராவோ வளந்திட்டோம்
எப்படியோ சந்திச்சிட்டோம்
எதனாலயோ பேசிக்கிட்டோம்

கண்ணு செஞ்ச தப்புக்கு
பாவி மனசு மாட்டிக்கிட்டு தவிக்குதே
நெஞ்சோடு கலந்த உன் நினைப்பு மட்டும்
கொஞ்சமும் கலங்காம வளருதே

மண்ணுக்கு உரமிட்டா
மரமெல்லாம் வளந்திடுமே
மனசுக்கு எதும் இடல
உன் நினைப்பு எப்படி வளந்திட்டோ????

அன்பு காட்ட அம்மாவொருத்தி
ஆதரிக்க அப்பாவொருத்தர்
தனித்தனியாதான் பாத்துருக்கேன்
இப்ப ஒத்தவனா உன்னுருவில்...

என்னவெல்லாம் பேசிகிட்டோம்
எண்ணமெல்லாம் பகிர்ந்துகிட்டோம்
ஆறுமுறை அழுதாலும்
ஆயிரம் முறை சிரிச்சிகிட்டோம்..!

நா கஷ்டப்பட்ட வேளையில
இஷ்டப்பட்டு உடனிருந்த
அப்ப நீ சொன்ன அழகான வார்தையெல்லாம்
இப்பவும் கேக்குது இசையாய் என்செவியில்

காத்திருந்த நம் உறவுக்கு
காலம் தந்த பேரு காதலாச்சு...
எல்லாம் நலமா இருந்ததால
எப்படியோ ரெண்டு வருசம் ஓடிடுச்சு

எப்படி கோவிச்சாலும்
எப்போதும் கூட இருந்த
பொறுமையின்னா இன்னதுன்னு
நீதான சொல்லி தந்த...

கண்ணுக்குள்ள உன்ன வச்சா
கண்ணீரா கரஞ்சிடுவன்னு
உசிருக்குள்ள ஒளிச்சுவச்சேன்
ஓயாம உன்ன நினச்சேன்

இனிப்பான நம் வாழ்கையில
யார்கண்ணு பட்டதோ தெரியவில்ல
ஏதோ காரணத்தால இடவெளி வந்திருச்சு
அதுவும் ஆறுமாசம் நீண்டிருச்சு

முதமுற நீ பிறந்த நாளுலதான்
அறிமுகம் நாம் ஆயிக்கிட்டோம்
இம்முறை நான் பிறந்த நாளுல
மறுபடியும் சேந்துகிட்டோம்

உன்னோட உறவையெல்லாம்
நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன்
என்னோட நிலைமையையும்
நீ நல்லா புரிஞ்சுகிட்ட

சாமி சேத்து வச்ச
நாம் கொண்ட நல்லுறவ
சாதி வந்து பிரிச்சுடுமுன்னு
கனவுலயும் நினைக்கலையே

உன் குடும்பத்துல ஒருத்தியாகும்
கனவெல்லாம் பல கண்டு
விசயத்த வீட்டுல சொல்ல
நான்தான உன்ன கேட்டேன்

எப்படியும் தெரியதான போகுது
அப்ப அத பாத்துக்கலாம்னு
எளிதாக நான் நினச்சது
இப்படி எமனாக மாறிடுச்சே..!

சந்தோசமா இருக்கதான
சாமி உன்ன வேண்டிகிட்டேன்
சாதியின ஏன் படைச்ச
அத சாபமாக ஏன் கொடுத்த????

கல்யாணம் நாங்க செய்ய
கலர்கலரா கனவு கண்டோம்
எல்லாம் கண்ணீருல கரைஞ்சி போய்
இப்போ கருப்பு வெள்ளையா நிக்கிறதே

நாம நாமன்னு சேத்து வச்சி நான்பேச
நீதான் என் வாழ்க்கைன்னு என்னோட அவன் பேச
கடல் போல தெரிஞ்ச கல்யாண வாழ்க்கையது
கானல் நீராய் போகுமோன்னு தெரியலயே

வேற வாழ்க்கைய அமைச்சிதர
எங்கள பெத்தவங்க முடிவெடுத்தா
எதுத்து ஏதும் செய்ய மாட்டோம்
அத ஏத்துக்கிட்டும் வாழமாட்டோம்

எங்கேயோ எப்படியோ அவன் பொழப்பு அவனோட
எத்தேசமோ எவ்வேலையோ எம்பொழப்பு என்னோட
நெருக்கம் அது தேவையில்ல
நாங்க நினப்புலயே வாழ்ந்திடுவோம்...

எழுதியவர் : மீனாட்சி (20-Nov-13, 4:44 pm)
பார்வை : 402

சிறந்த கவிதைகள்

மேலே