காதலுக்கும் உயிர் உண்டு ஆகையால் கொல்லாதீர்

இதயம் தவறி விழுந்த இடமெல்லாம்
காதல் முளைக்கிறது !
அது சாதி மதம் மொழிகள் கடந்து
அன்பை வளர்க்கிறது !

ஆணினம் பெண்ணினம் என்பது போக
வேறினம் வெறுக்கிறது !
மிருகத்தைக் கூட மயக்கத்தில் ஆழ்த்தி
ஆறறிவு கொடுக்கிறது !

மனதை வருடுகிற மந்திர வரிகளாய்
பாடல்களில் ஒலிக்கிறது !
வலியைக்கூட சுகமென்கிற
உணர்வை உள்ளத்தில் விதைக்கிறது !

ஆணென்ற பெண்ணென்ற வேற்றுமை
அழித்து சரிசமம என்கிறது !
ஆண்டவனைக் கூட அவதாரம் எடுக்க வைத்து
ஆளுமை செய்கிறது !

உயிர் ஒன்று உலகில் பிறக்கின்ற பொழுதே
உடன் ஓட்டிப் பிறக்கின்றது !
சாதி,மத,கௌரவ,ஏமாற்றுக் கிருமிகளால்
காயம் பட்டு கதறி இறக்கின்றது ..!

எழுதியவர் : ஜெகதீசன் (24-Nov-13, 12:56 am)
பார்வை : 111

மேலே