ப்ரியமானவளுக்கு

உன்னைப் பார்க்கப் போகும் அந்த கணத்தில் என்ன செய்வாய் நீ....? எங்கே போனேன் இதுநாள் வரையில் என்று காதலை கோபமாக்கி முறைப்பாயா? அழுகையை கவிதையாக்கி புன்னகையோடு பிசைந்து கொடுப்பாயா? வேகமா ஓடி வந்து என் மார்பு வலிக்கும் வரை வலிக்காதது போல அடிப்பாயா? இல்லை மெளனத்தில் நேரத்தைக் கரைத்து என்னை இம்சிக்கும் அமைதியை கொடுத்து விட்டு என்னருகிள் எதுவுமே பேசாமல் நிற்பாயா? எழுதி வைத்திருக்கும் கவிதைகளை என் கையில் திணித்து விட்டு வாசித்து தெரிந்து கொள் என்று கட்டளையிடுவாயா?
காற்றில் பறக்கும் உன் கேசம் ஒதுக்க நினைக்கும் என் ஆசையை அப்போது என்ன செய்வேன் நான்...? என் நெஞ்சோடு உன்னை ஆதரவாய் அணைக்க நினைக்கும் என் காதலை எந்த உணர்வுக்குள் ஒளித்துக் கொண்டு வேசமிடுவேன்...? எப்போதோ வாசித்த புத்தகத்திலிருந்து இது போன்ற சூழல் ஒன்றை மூளையிலிருந்து பிய்த்தெடுத்து அதற்கு ஒப்பனைகள் இட்டு நடித்து விடுவேனோ....? வாஞ்சையாய் உன் கை பிடித்து என் உயிரை உஷ்ணமாக்கி உன் கைகளின் வழியே பரவவிடுவேனா...? இல்லை என்ன செய்யப் போகிறோம் என்ற கற்பனையில் நான் எழுதி வைத்த பக்கங்களைக் கொடுத்து உன்னை வாசிக்கச் சொல்லப் போகிறேனா..?
நான் உன் நினைவுகளோடு நட்டு வைத்த பூச்செடிகளை எல்லாம் என் தோட்டத்திற்கு உன்னை அழைத்துச் சென்று என் காதலை பூத்து வைத்திருக்கும் அழகினை உனக்கு காட்டக் கூடும்..., உன் பெயரிட்டு நான் வளர்க்கும் என் வீட்டு மீன் தொட்டியில் உன்னைப் போலவே திமிராய் சுற்றித் திரியும் மீனோடு உன் விழிகளை நான் தொடர்புபடுத்தி உன்னிடம் வம்பு இழுக்கவும் கூடும்...
நான் உனக்காய் சேகரித்து வைத்திருக்கும் பாடல்களை எல்லாம் ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டே ஏதேதோ பேசிக் கொண்டு காலம் என்னும் விசயத்தை தொலைந்தே போ என்று விரட்டிவிட்டு காலமில்லாப் பெரு வெளியில் கைகோர்த்துச் செல்லலாம்...
....ம்ம்ம்.. இதோ நான் தனிமையில் உன்னைப் பற்றிய் நினைவுகளில் நடந்து கொண்டிருக்கிறேன். மெலிதாய் குளிர ஆரம்பித்திருக்கும் இந்த தருணத்தில் எனக்குள் உஷ்ணமாய் பரவிக் கொண்டிருக்கிறது உன் மீதான காதல்...
விழிகளுக்குள் குடியேறியவள்
இமைகளை மூட விடாமல்
என்னுள் இமைத்துக் கொண்டே இருக்கிறாள்....
என்று நான் எழுதி பாதியில் விட்டு விட்டு வந்த கவிதையொன்று வீட்டிலிருந்து என்னை தேடி வந்து இம்சித்துக் கொண்டிருக்கிறது என்னை முழுதாக்கி அவளுக்காய் சமர்ப்பித்து மோட்சமடையச் செய் என்று...., உன்னைப் பற்றி எழுத எனக்கு மட்டுமா ஆசை என்று நினைக்கிறாய் என் வார்த்தைகளுக்கும் கூடத்தான்....எப்போதும் வறட்சியாய் வார்த்தைகள் வந்து விழும் பேனா...உனக்காய் எழுதுகையில் கட்டுக்கள் உடைத்து சீறித்தான் பாய்கின்றன...
என் ஒவ்வொரு கணத்துக்குள்ளும்
அடைபட்டுக் கிடக்கும் உன் நினைவுகளை
என் தினசரிகளாக்கி விட்டு சென்றவளே....
நான் உன்னைப் பற்றி எண்ணிக் கொண்டும்
எழுதிக் கொண்டும் இருக்கிறேன்....
....
....
....
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது........?