தலைவா திரைப்பட அனுபவம்–ஜூஸ் கேட்டு தண்ணீர் தான் கிடைத்தது

நீங்க யாரும் போயிடாதீங்க, இன்னும் ஒரு காட்சி ரெஸ்டாரண்ட் உள்ளுக்குள்ள எடுக்கணும், அதனால போய் காஸ்ட்யூம் மாத்திக்கிட்டு வாங்கன்னு இயக்குனர் சொன்னாரு. நாங்களும் மறுபடியும் அந்த உணவகத்துக்குள்ள போய் எங்க துணிப்பெட்டியை திறந்து வேற பாண்ட், சட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு பல்லவி அக்கா கிட்ட வந்து (அதாங்க, காஸ்ட்யூம் டிசைனர் கிட்ட ), இந்த டிரஸ் நல்லாயிருக்குமா,அந்த டிரஸ் நல்லாயிருக்குமான்னு கேக்க ஆரம்பிச்சோம். அவுங்களும் நீங்க பாண்ட் மாத்த வேண்டாம், வெறும் சட்டையை மட்டும் மாத்திக்குங்கன்னு சொன்னதுனால, எல்லோரும் வேற சட்டையை மாத்திக்கிட்டோம்.இன்னொரு நண்பர் ஒருத்தர் சட்டையை மாத்திக்காம இருந்தாரு. நீங்க மட்டும் ஏங்க இன்னமும் மாத்திக்காம இருக்கீங்கன்னு கேட்டேன்,அதுக்கு அவரு நான் கொண்டு வந்த டிரஸ் எல்லாம் என்னோட கார்ல தான் இருக்கு,ஆனா காரு தான் இப்ப என்கிட்ட இல்லைன்னாரு. காரு எங்க போச்சுன்னு கேட்டா, அமலா பால் மேக்கப் பண்ணிக்கிறதுக்காக என் கார்ல தான் போயிருக்காங்க. அவுங்க வந்தா தான் நான் வேற டிரஸ் மாத்திக்க முடியும்னு சோகமா முகத்தை வச்சுக்கிட்டு சொன்னாரு. சரி தான், சும்மாவே பொண்ணுங்க மேக்கப் பண்ணிக்கிறதுக்கு ரொம்ப நேரம் எடுத்துப்பாங்க. இதுல இவுங்க கதாநாயகி வேற, கேக்கவே வேணாம்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்.அப்ப என் பக்கத்துல நின்ன இன்னொருத்தர் அவரிடம், ஏங்க அமலா பால் உங்க கார்ல போயிருக்காங்கன்ன, உங்க கார் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கு போல அப்படின்னு சொல்லி, நீங்க அமலாபாலை பார்த்தீங்களான்னு கேட்டாரு.ஏற்கனவே நம்ம நண்பருக்கு வேற டிரஸ் மாத்த முடியலையேன்னு கடுப்பு, இதுல இன்னொருத்தர் அமலா பாலை நீங்க பார்த்தீங்களான்னு கேட்டவுடனே கோபம் வந்துடுச்சு.அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களும் பார்க்க தானே போறீங்க, அதுக்குள்ள என்ன அவசரம்னு கேட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிட்டாரு.ஆனா ரொம்ப நேரம் நம்ம நண்பரை காக்க வைக்காம, அமலாபால் சீக்கிரம் மேக்கப் போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. நாங்க எல்லோரும் ரெடியா காத்துக்கிட்டு இருந்தோம். அவுங்க கூப்பிடுற மாதிரி தெரியலை. வேகாத வெயிலில் இரண்டு மணி நேரத்திற்கு மேல நின்னதுனால ஜூஸ் குடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அதனால நாங்களும் இங்கு ஆஸ்திரேலியாவில், உள்ளூர் வெள்ளைக்கார கலைஞர்களை ஏற்பாடு செய்பவரிடம் சென்று, ஜூஸ் கேட்டோம். படப்பிடிப்பு நடந்ததோ ஒரு உணவகத்தில். அதனால அவரு போய் ஜூஸ் எடுத்துக்கிட்டு வருவாருன்னு நினைச்சோம். இரண்டு நிமிஷம் கழிச்சு கையை நல்லா வீசிக்கிட்டு வந்து, ஜூஸ் இல்லை, தண்ணி தான் இருக்காம். தண்ணியை குடிக்கிறீங்களான்னு கேட்டாரு. அப்பவே எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு, இந்த படக்குழு, எச்சில் கையால காக்காயை கூட ஓட்டமாட்டாங்கன்னு. சரி, நமக்கு ஒரு புது அனுபவமாக இருக்குமேன்னு தான் இந்த படத்துல நடித்துக் கொடுத்தோம். ஆனா, என்னடான்னா, ஆஸ்திரேலியாவில படப்பிடிப்பு நடந்ததுனால தான் பட்ஜெட் அதிகமாயிடுச்சுன்னு ஒரு பேச்சு. என்னத்தை சொல்றதுக்கு இருக்கு!!!!!!!!!!!!!!!!!!

அந்த உணவகம் கொஞ்சம் பெரிய உணவகம். வெளியிலிருந்து உள்ள போனா, இடது பக்கத்துல பெரிய உணவுக்கூடம் இருக்கும்,அந்த உணவுக்கூடத்தோட இன்னொரு மூலையில, பார்ட்டி நடப்பதற்காக ஒரு பெரிய அறை இருக்கும். அந்தக் அறையில தான் நாங்க போய் டிரஸ் எல்லாம் மத்திக்கிட்டு இருப்போம். வலது பக்கத்துல இன்னொரு சின்ன அறை இருக்கும், அந்த அறைல தான் நாங்க சாப்பிடுகிற காட்சியை படம் பிடிக்கிறதுக்காக எல்லோரும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எங்களை யாரும் கூப்பிடாததுனால, நாங்களே அந்த அறைக்குள்ள போனோம். உடனே நம்ம கிருஷ்ணா (அதாங்க, உதவி இயக்குனர்) நாங்க செட்டை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம், அதனால கூப்பிடும்போது வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாரு. நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடனே வீட்டு அம்மணி, ஏங்க மணி ஒண்ணாயிடுச்சு, குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கணும், அதோட எனக்கும் பசிக்குதுன்னு சொன்னாங்க. கூடவே இன்னொரு நண்பரோட மனைவியும்,ஆமாங்க பசிக்குது நாங்க இந்த உணவகத்துலேயே சாப்பிட்டுக்கிறோம்னு அவுங்க கணவனிடம் சொன்னாங்க. அவுங்க கணவரும், என்னிடம் நாமளும் பேசாம இப்பவே இவுங்களோட சாப்பிடுவோமான்னு கேட்டாரு. நானும் இருங்க, எப்படியும் நமக்கு படப்பிடிப்பு குழுவினர் சாப்பாடு கொடுப்பாங்கன்னு சொன்னேன். நண்பருக்கு நம்பிக்கை இல்லை. ஜூஸ் கேட்டதுக்கே, தண்ணி மட்டும் தான் இருக்குன்னு சொன்னவங்களா, நமக்கு சாப்பாடு கொடுக்கப்போறாங்கன்னு சந்தேகமா கேட்டாரு.

நானும் உங்க சந்தேகத்தை தீர்த்துடலாம்னு சொல்லி, படப்பிடிப்பு குழுவினருக்கு விசா,மற்ற உதவிகள் எல்லாம் பண்றவர் கிட்ட போய் (அவரு தான் இந்த படத்துல நடிக்கிறதுக்கு ஆட்கள் வேணும்னு என் நண்பர் அனகன் பாபுவிடம் சொன்னவரு), எங்களுக்கு இங்க மதிய உணவு கொடுப்பாங்களான்னு கேட்டேன். அவர் உடனே, இந்த சினிமாக்காரங்க நேரம் எல்லாம் உங்களுக்கு ஒத்து வராது, அவுங்க கண்ட கண்ட நேரத்துல சாப்பிடறதுக்கு பிரேக் விடுவாங்க, அதனால நாளையிலிருந்து நீங்க சாப்பாட்டு மூட்டையை கட்டிக்கிட்டு வந்துடுங்கன்னு சொன்னாரு. நண்பரும், என்னைய ஒரு பார்வை பார்த்தாருங்க பாருங்க, ஏண்டா, உனக்கு அறிவில்லையா, இவனுங்க கிட்ட போய் சாப்பாட்டை பத்தி கேக்குறியேன்னு பார்வையாலையே கேட்டாரு.அட!கடவுளே, இந்த அளவுக்கா இவனுங்க கஞ்சப் பயலுங்கன்னு நினைச்சுக்கிட்டேன். நண்பரும், பேசாம வாங்க நாமளும் இந்த உணவகத்துலேயே ஏதாவது சாப்பிடலாம்னு மறுபடியும் கூப்பிட்டாரு. நான் அவரிடம்,நாம ஆர்டர் பண்ணி உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது, அவுங்க ஷூட் பண்றோம் வாங்கன்னு சொன்னா, நாம அப்படியே எந்திரிச்சு போகணும், அதனால அவுங்க லஞ்ச் பிரேக் விடும்போது சாப்பிட்டுக்கலாம்னு சொல்லி வாயை மூடலை, அதுக்குள்ள கிருஷ்ணா எங்களை ஷாட் ரெடி வாங்கன்னு கூப்பிட்டாரு.

அப்புறம் எப்ப லஞ்ச் பிரேக் விட்டாங்க, நாங்க எப்படி சாப்பிட்டோம்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

- இன்னும் சொல்கிறேன்

எழுதியவர் : சிட்னி சொக்கன் (26-Nov-13, 8:18 am)
சேர்த்தது : sydney chokkan
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே