நான்மணிக்கடிகையில் பஃறொடை வெண்பா - பகுதி 1
முன்னுரை:
கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்ற சொற்றொடர் நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று நான்கு பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத் தேர்ந்தெடுத்துப் பிணைத்து, அழகிய சொற்கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளார். அதனோடு சொல்லும் முறையிலும் ஓர் ஒருமைப்பாடு அமைந்திருப் பதையும் காணலாம்.
இயற்றியவர்: இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவராவர். நாகனார் என்பது இவரது இயற்பெயரையும் விளம்பி என்பது இவரது ஊர்ப் பெயரையும் குறிக்கிறது. இவர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர் எனப்படுகிறது.
கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டு நீங்கலாக இந்நூலுள் 104 செய்யுட்கள் உள்ளன. 'மதிமன்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், இந்நூலில் உள்ள செய்யுட்களில், 'கற்ப, கழிமடம் அஃகும் (28)', 'இனிது உண்பான் என்பான்' (59) என்னும் இரு செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்கள் ஆகும். மற்ற வெண்பாக்கள் எல்லாம் நேரிசை, இன்னிசை அளவியல் வெண்பாக்கள் ஆகும்.
பஃறொடை வெண்பா அறிமுகத்திற்கு முன் நேரிசை, இன்னிசை வெண்பாக்களை அறிவோம்.
நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும்.
நேரிசை வெண்பா:
பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணமும், நான்கு அடிகளையும், இரண்டாவது அடியில் தனிச்சொல்லும் கொண்டு அமைந்திருக்கும்.
நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையும், அடுத்த இரண்டும் வேறுவகை எதுகையும் உடையனவாகவோ இருத்தல்.
ஒரு விகற்ப நேரிசை வெண்பாவிற்கு உதாரணம்:
கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் - சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும்
செல்வமு முண்டு சிலர்க்கு. 3 நீதிநெறி விளக்கம்
‘சொல்வளம்’ என்ற தனிச்சொல் இரண்டாவது அடியில் பெற்று, நான்கு அடிகளின் எதுகைகளும் சீராக இருப்பதனால் இது ஒரே எதுகை (ஒரு விகற்பம்) நேரிசை வெண்பா ஆகும்.
இரு விகற்ப நேரிசை வெண்பாவிற்கு உதாரணம்:
வேரில்லாப் பச்சைநிறப் பாசிகளாய்ப் புன்மையர்
பாரினிலே பாங்காய்ப் படர்ந்திருக்க – நீரில்லா
நெல்வயலாய்ப் புல்லரால் நல்லவர் வாழ்நிலை
கல்நெஞ்சத் தீயோர் கழி! – நெருப்பலைப் பாவலர் இராம.இளங்கோவன், பெங்களூரு
இதன் இரண்டாவது அடியில் 'நீரில்லா' என்ற தனிச்சொல்லும், முதல் இரண்டு அடிகள் ஒருவகை எதுகையையும் (வேரில்லாப் - பாரினிலே), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (நெல் - கல்) கொண்டு அமைந்துள்ளன. எனவே இது இரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.
நாட்டின் நிலையறிந்து நல்லோர் துயரறிந்து
ஏட்டில் பல,எழுதி ஏமாந்து - பூட்டிவைத்த
கண்ணீர் வடிக்கக் கருதியோ வந்ததிரா!
எண்ணீர் இதற்கு முடிவு! – காளியப்பன் எசேக்கியல்
இதன் இரண்டாவது அடியில் 'பூட்டிவைத்த' என்ற தனிச்சொல்லும், முதல் இரண்டு அடிகள் ஒருவகை எதுகையையும் (நாட்டின் - ஏட்டில்), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (கண்ணீர் - எண்ணீர்) கொண்டு அமைந்துள்ளன. எனவே இதுவும் இரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.
(தொடரும்)