இனிதுஇனிது பொங்கல் இனிதுooசொசாந்தி

#இனிது
பொங்கல் இனிது

வந்தது வந்தது தைத்திங்கள்
வணங்கி மகிழ்ந்து வைப்பொங்கல்
தந்திடும் இன்பங்கள்
கோடிதான்
தத்திமி ஆடிடு கூடிதான்..!

சிந்திய வியர்வை
பெருந்துளி
செங்கதிர் வளர்த்தார்
மதிப்பளி
வந்தனம் செய்து வாழ்த்துவாய்
இப்புவி தெய்வங்கள்
உழவர்தாம்..!

மாவிலைத் தோரணம் வாயிலிலே
மஞ்சள் குங்குமம் பானையிலே
கூவியே பொங்கலாம்
புதுப்பொங்கல்
கூடியே உண்ணலாம் சுவைக்கன்னல்..!

மட்டற்ற உழைப்பை நல்கிடும்
மாட்டுக்கு நடக்கும்
ஓர்விழா
கட்டிவைப்பா ரதன் கொம்பினில்
மெட்டிசைக்கும் பல மெட்டினில்..!

ஆட்டுந் தலையினில்
ஒலித்திடும்
ஆனந்த ராகங்கள்
இசைத்திடும்
மாட்டுப் பொங்கலின்
நாளினிலே
மாடுகள் கிடக்கும் ஓய்வினிலே..!

கல்யாணக் காலமும் பிறந்தது
கன்னிக்கு மாலையும் கிடைத்தது
செல்வத்தை தைமகள்
அளித்திட
சீரும் சிறப்பெல்லாம் நடக்குது..!

ஜல்லிக்கட்டு காளை அடக்குவோம் - என்று
சொல்லிக்கிட்டு வீரம் திரியுது
மல்லுக்கட்டிக் காளை யடக்கியே
வாங்கி மகிழுது பரிசையே..!

தேடி உறவுகள் கண்டிட
தேனாக இனிக்கும்
பொங்கலாம்
கூடிமகிழ்ந்திட காணும் பொங்கல்
கும்மிகள் கொட்டியும்
ஆடிடலாம்.

இனிது பொங்கலில்
இன்பங்கூடும்
ஏரோட்டும் மக்களின்
துன்பமோடும்
நனிசிறப்புகள் கொண்ட தைதான்
நம்பிக்கைக்கூட்டும் நம்மில் மெய்தான்..!

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்து களுடன்..🌹🌹🌷🪷
சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (15-Jan-25, 5:59 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 8

மேலே