சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக
சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக...... ஒரு தேவதை வந்தது நீராட..... வெண்ணிற ரோஜா, தன்னிறம் மாறி மாலை சூடுதோ .....
அந்த வானம் பூக்களை தூவாதோ.. புது வாழ்த்துக் கவிதைகள் பாடாதோ....
அதற்கு மேல், ரவியால் அந்த பாடலை கேட்க முடியவில்லை.. சில போது பிடித்த பாடலைக் கூட முழுதாக கேட்க முடிவதில்லை....... காற்றெல்லாம் கனமானது போன்றே அந்த மதிய வேலை அவனுக்குள் பல வித யோசனைகளை அல்லது நினைவுகளை கிளறி விட்டுக் கொண்டிருந்தது..........அவனுக்கு பிடிக்காத தொழில், மோட்டார் தொழில்...... ஆனால் இன்று அவனின் வாழ்வாதாரம், அவன் செய்யும் இந்த டிரைவர் தொழில்தான்......
ஏனோ , சற்று ஓய்வு தேவை என்று மனதிற்கு பட்டதால், அந்த ஆற்றோரம் நிறுத்தினான்.......
எப்டின்னே, இவ்ளோ பெரிய லாரியை நாய்க்குட்டி மாறி அடக்கற......
சற்று சிக்கலான இடங்களில் மொத்த திறமையையும் பயன்படுத்தி லாவகமாக வண்டியை நிறுத்துவதும் , இயக்குவதும் - என்கின்ற பொழுதுகளில், அந்த லாரியின் கிளீனர் இலக்கி மேற்சொன்னவாறு கேட்பதுண்டு......
செய்யும் தொழில் ஒரு கட்டத்திற்கு பின் மிகச் சரியாக பழகி விடும் .......
வண்டியை நிறுத்திய பின் இலக்கி மதிய உணவு தயாரிக்க தொடங்கினான்..
'அண்ணே , வெங்காய சாம்பார் வைச்சிடலாமா என்றான்.'..... அதில் அவன் நிபுணன்.....
தலையாட்டி விட்டு, வண்டியை விட்டு இறங்கி , சாலையோரம் தலை விரி கோலமாய் நின்ற ஆலமரத்தின் கீழ் அமர்ந்தான்.....
மனதுக்குள் முணு முணுககாமல் இருக்க முடியவில்லை... சின்ன கண்ணன் தோட்டத்துப் பூவாக.. ஒரு தேவதை வந்தது நீராட.............................................................................................................................................................
தலையெல்லாம் ஆங்காங்கே ஒட்டியிருந்த பருத்தி நூலோடு சசிகலா நடந்து வந்து கொண்டிருக்க, இவன் அமர்ந்திருக்கும் தேநீர் கடையிலிருந்துதான் அந்த பாடல் கசிந்து கொண்டிருந்தது....
தேவதை வந்தது நீராட......... என்ற வரிக்கும், அவள் யதேச்சையாக, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் ரவியை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது....கால கணக்கு....
அட, நம்ம சசி.... இதுவரை பார்த்த பார்வையில் இருந்து சட்டென விலகி வேறு யாரோ மாதிரி இருக்கிறாள்....மெல்ல புன்னகைத்து போனாள் .....தெரிந்த பையனுக்கு எவ்ளோ புன்னைகையோ.. அவ்ளோ....சுள்ளென்று அடித்தது சில்லென்ற பனித்துளி.. சுளீரென கடித்தது கையிலேறிய எறும்பு ....
ஏய்.... ரவி...... இன்னும் இங்க என்ன பண்ணற... படம் முடியற நேரம்டா...... அலாரம் அடித்துப் போனான் அன்பு.....
அட ஆமா... என்று கடைசி மிடரை கபக்கென முழுங்கி விட்டு, தியேட்டருக்குள் ஓடி, சைக்கிள் ஸ்டாண்டில் தயாராகி நின்றான்....
அவ்வப்போது எதிர்படுவாள்...... பெரிய வீதியில், கண்கள் உரசி, சிறு புன்னகையோடு கடந்து செல்வார்கள்..... ஆழ்மனதிற்குள் கொஞ்சூண்டு ஆசை அவள் மேல் இல்லாமல் இல்லை.... ஆனால் அது விஸ்வரூபம் எடுக்கவில்லை.. சின்ன முகம் .. மாநிறம்... கீச் கீச் குரல்.. அவளுக்கு கிளி என்றொரு பெயரும் ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கிறது....
மஞ்சு, இந்த ரவி, நல்லா ஆடரான்ல.... நல்லா டிரஸ் பண்ணா, தியேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறவன் மாதிரியே இல்லல.... நல்லா படிப்பாண்டி..... ஆனா ஒன்பதாவதுக்கு மேல, பள்ளி கூடத்துக்கு போக மாட்டேனுட்டான்....இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் தோழி மஞ்சுவிடம் இப்படி நிறைய அவனைப் பற்றி பேசியிருக்கிறாள்....
ஆனால், இந்த விஷயம் ரவிக்கு தெரிந்ததேயில்லை...
இவர்கள் இருவருமே சிறுவயதில்... ஒன்றாக விளையாடியவர்கள்தான்... அவன் ஒன்பதாவதில் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவன்.... அவள் பத்தாவதில் முடித்துக் கொண்டவள்...ஏனோ, பதின் பருவத்துக்கு மேல் அவர்கள், பேசிக் கொள்வதில்லை.. சிறு புன்னகை, சிறு சிரிப்பு... சிறு வாழ்த்து.. கோயில் திருவிழாக்களில் ஆடிய பின் வரும் கை குலுக்கல் அவ்வளவே....
அந்த மதிய வேளை அவர்களால் வாழ்ந்தது என்று இந்த காட்சி முடியும் போது தெரியும்....
அவள், அன்று காலையில் வேலைக்கு போகவில்லை போலும்.... மதியம் நடந்து கொண்டிருந்தால், பருத்தி கம்பெனி நோக்கி....
பங்காளி... சைக்கிள் புதுசா.. என்றபடியே பங்காளி லட்சுமி(காந்த் ) அருகே வந்தான் ரவி....ஆமா, பங்காளி... எப்பதான் ஆப்பகூடல்ல இருந்து ஓட்டிட்டே வரேன்......இந்தா.. ஒரு ரவுண்டு அடிச்சு பாரு.. என்றான்....
அடுத்த காட்சிக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்க, சைக்கிளை வாங்கி கொண்டு வெள்ளையம் பாளையம் நோக்கி ஓட்டத் துவங்கினான்....ரவி...
வர வேண்டும் என்று முடிவெடுத்த பின், இந்த காதல் வந்தே தீரும்.....
மதிய வேளை .... சூரியனும் வியர்வையும் மட்டுமே............. சாலையெங்கும் கானல் நீர்.... சுற்றிலும் மேட்டாங்காடு....பாதை மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கும் நீண்டதொரு ஓவியத்தில் உறைந்து விட்ட வண்ணமென ... சசிகலா நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்....சிவப்பு தாவணியில் சின்னதாய்.... புது கவிதையாய்... மூக்குத்தி சுமக்கிறது சூரியனை.... கன்னங்களில் மூக்குத்திகளாய் வியர்வைதுளிகள்....
நெருங்கி விட்டான்... அவளும் பார்த்து விட்டாள் .... புன்னகை எப்போதும் போல..... என்ன கம்பனிக்கா..?
ஆமா ரவி.. இப்பதான் போறேன்.. காலைல கொஞ்சம் வேல இருந்துச்சு.. ஆமா, என்ன இந்த பக்கம்....!...............அவள் கேட்டபடியே நடந்து கொண்டிருக்க, இவன் அவள் பேசுவதை கேட்டபடியே மெல்ல சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான் ....
இல்ல..... பங்காளி லட்சுமியோட புது சைக்கிள்..... சும்மா ஒரு ரவுண்டு அடிக்கலாமேன்னுதான் ......... வார்த்தைகளை இழுத்தவன்....கேட்டே விட்டான்.. கம்பெனிக்குதான ..... வா... நா எறக்கி விடறேன்....அவள் முகத்தையே பார்த்தான்... மினு மினு என்றிருந்தது.... முகம்
அவள், நானே கேக்கலானு தான் நினைச்சேன்... வெயில்லு..... நடக்க முடியலப்பா.. என்றபடியே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் ....மனமெங்கும் ஒரு வித குளுமையை உணர முடிந்தது.. ஏதோ பெரிய சாதனை செய்தவன் போல முகமெங்கும் இனம் புரியாத சந்தோசம்.....
ஏய்.... எங்க போற.... கம்பெனி இந்த பக்கம் என்றாள் , இடது பக்கம் சென்ற பாதையை காட்டி....
வெள்ளையம் பாளையம் போய் ஒரு கலர் குடிச்சுட்டு திரும்ப வந்தர்லாம் என்றான்....அவனால் அவளுடன் பயணிக்கும் தருணங்களை விட்டுத் தர முடியவில்லை....அவள் மௌனத்தில் சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்..... வண்டி வெள்ளையும் பாளையம் தாண்டி, பிரம்மதேசம் நோக்கி பயணிக்க....
ஏய் ரவி...... விளாடாத .... நேரமாச்சு.... வண்டிய திருப்பு என்றாள் சசி...
முடியாது என்றவன், பிரம்மதேசம் வரை போயிட்டு வந்தர்லாம் என்றான் ....வியர்த்திருந்த முகத்தில், கழுத்தில் சைக்கிள் கிழித்துக் கொண்டு செல்லும் குளிர்ச்சி குளுகுளுவென்றிருந்தது... இப்ப வண்டிய திருப்ப போறீயா இல்லையா....... சற்று கடுமையாகவே இருந்தது வார்த்தைகள்......
அவனால் இந்த சந்தோசத்தை இழக்க முடியவில்லை.... சட்டென கேட்டு விட்டான்.. எனக்கு ஒரு முத்தம் தா.. வண்டிய திருப்பிடறேன் ... கண்டிப்பா தர மாட்டா.. வண்டில கொஞ்ச தூரம் போலாம் என்பது அவனின் எண்ணம் .....வண்டிய நிறுத்து தர்றேன் என்றாள் ..... அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.. வண்டியை நிறுத்தினான்....இறங்கியவள், என்ன தரமாட்டேன்னு நினைச்சியா.. என்றபடியே அவன் சட்டையை பிடித்து முன்னால் இழுத்து, இதழோடு இதழ் பதித்தாள் ....சற்று முன் அவள் போட்டிருந்த வெற்றிலை இடம் மாறியது.....
கானல் நீரெங்கும் கொக்குகளும் மீன்களும் போல மர அசைவின் நிழல்கள்....
சைக்கிள் கம்பெனி நோக்கி பறந்து கொண்டிருந்தது..... முன்னால் அவள் அமர்ந்திருந்தாள் .. அவன் ஆகாயத்தில்.......
கம்பெனி முன்னால் இறக்கி விட்டுவிட்டு, சசி................... லவ் பண்றதான .................................?
ஆண்களின் சந்தேகம் சந்தேகம் தான்......
லப் பண்ணமையா முத்தங் குடுத்தேன்.......... சிரித்தபடியே உள்ளே ஒடினாள் .....
அண்ணே சாப்பாடு ஆச்சு.. வாங்க...
கிளீனரின் குரலில் கலைந்தான் ரவி... அவனக்கு இப்போது குடிக்க வேண்டும் போல் தோன்றியது........
இப்ப எதுக்கு குடிச்சுட்டு இருக்க ...வீட்ல விஷயம் தெரிஞ்சா, எதுத்து சண்டை போடணும்... இல்ல, என்ன கூட்டிட்டு போய்டு.. அத விட்டுட்டு குடிச்சா .... சரியா போய்டுமா.... சைக்கிள் ஸ்டாண்டுக்கே வந்து விட்டாள் சசிகலா....
அது இல்ல சசி..... உங்கம்மா என்னை எவ்ளோ கேவலமா பேசிருச்சு தெரியுமா....தேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறது கேவலமான தொழிலா.... வாரம் ஐநூறு ரூபா சம்பாதிக்கறேன்..... பாத்தாது ?......என்றான்..........ரவி.
புலம்ப தொடங்கியவனை ..... சரி விடுடா.. எங்கம்மாவா உன்ன கட்டிக்க போகுது.. நான் தான?.. எப்பவும் நான் உன்ன விட்டுட்டு போக மாட்டேன்... சரியா....என்றபடியே அவன் வைத்திருந்த இரண்டு மிடறுக்கான சரக்கை சட்டென எடுத்து வாய்க்குள் ஊற்றினாள் ....
ஏய்... என்னடி பண்ற... இந்து தப்பு என்றான், சைக்கிளில் இருந்து எழுந்த படியே....
எனக்கு ரெம்ப நாளா இத குடிச்சு பாக்கனும்னு ஆசை...என்று கண் அடித்தாள் ....சைக்கிள் ஸ்டாண்டில் இருக்கும் அந்த ஒற்றை லைட்டில் பிரகாசமாய் தெரிந்தாள் ....
வாழ்க்கைல, ஆசைப்பட்டத பண்ணிப் பார்த்திடனும்.. இப்ப என்ன.. இத குடிக்கணும்... அவ்ளோதானே.. என்றவன், இருந்த சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து கொடுத்தான்.. கண்களை இறுக மூடி, முகத்தை கோணி என்னென்னவோ பாவனைகளில் அந்த கிளாஸ் முழுக்க உள்ளே போனது....
கண்கள் சொருக, அவனையே பார்த்தாள் ...என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும் என்றாள் .. இன்னும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு...உள்ளே செந்தூரப் பூவே படம் ஓடிக் கொண்டிருந்தது.......சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை..... பாடல்.... காதில் தேனாய் பாய அவன் அவளையே பார்த்தான்....
ஏய் சசி..... இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் உன் ஞாபகமாகவே இருக்கு..... நீயும் நானும் ஆதார மாறியே ஒரு இது.. இது.........
இதுன்னா.......
இதுன்னா... ஒரு .. ஒரு ஜாலி.... அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை....
கல்யாணத்துக்கப்புறம் , நாம இங்கயே இருக்கலாமா.. இல்ல , வெளியூர் போய்டலாமா.... அவள் வாய் குழறியது...... காரணமின்றி சிரித்தாள்....
ஹேய்..... சசி.. உங்கம்மா ஒத்துக்குமா..... எனக்கு பயமா இருக்குடி....
இருவரும் எதிரெதிரே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்....
எங்கம்மா ஒத்துக்கும்... ஒத்துக்க வைப்பேன்.... பாக்க தான் நான் அமைதி .. கோவம் வந்துச்சுனா... பத்ரகாளிதான்....
அப்டியா... எங்க கோவப் படு........... பாக்கலாம்........ என்று முகத்தை அவள் முன்னால் கொண்டு போய் காட்ட.....
அவள் கபக்கென வாந்தி எடுத்தாள் ......
ஐயே.......ஏய் .. எ.... யா.... லூசு.... எஐ லூசு..... வோவ்...
காதல் வளர்ந்தது...... அந்த ஒரு மாதத்தில் தாவணி பரிசளித்தான்.. கண்ணாடி பரிசளித்தாள்.... பாசிமணி வாங்கி கொடுத்தான்......... போன சனிக்கிழமை இரண்டாவது காட்சிக்கு குடும்பத்தோடு செந்தூரப்பூவே பார்க்க போயிருக்க, சந்திரனிடம் சொல்லி ஸ்பெசல் டீ , முறுக்கு, இடைவேளையில் கிடைக்க செய்தான்..... கிளியின் தாத்தாவுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பினான்.. இன்னும் என்னென்னமோ செய்தான்.. பங்காளியின் புது சைக்கிள் ரெம்ப உதவியது....
செந்தூர பூவே .. படம் பயங்கர பிக் அப்..... கூட்டம் நான்கு காட்சிகளிலும் பட்டையை கிளப்பியது.. இன்னும் சொல்லப் போனால்,கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை....நிரோஷா அழும் காட்சிகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்தது .....
அருவி தியேட்டர், சிங்காரி தியேட்டருடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரே ரீல் பெட்டி , இரு தியேட்டர்களிலும் ஓடும்..... அதாவது முதல் ரீல் முடிந்ததும், அதை டேக்ஸியில் வைத்து அடுத்த தியேட்டருக்கு கொண்டு சென்று ஓட்டுவார்கள்.....அடுத்த அரை மணியில் ரெண்டாவது ரீல்... அப்போது அங்கு முதல் ரீல் முடியும் நேரமாய் இருக்கும்.....சில போது அடுத்த ரீலின் வரவுக்காக ஐந்து, பத்து நிமிடம் படம் பார்ப்பவர்கள் காத்திருக்கவும் நேரிடும்....அப்படி ஒரு நாளில், டாக்சி டிரைவர் உடம்பு முடியாமல் படுத்து விட, அடித்தது டிரைவர் யோகம் ரவிக்கு....தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பது தியேட்டர் ஓனருக்கு அரசால் புரசலாக காதில் விழுமாறு சில பல அறிவாளி வேலைகளையெல்லாம் ஏற்கனவே ரவி செய்திருந்தான்....
இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ரவி காரில் பறந்து கொண்டிருக்கிறான்....
தியேட்டரின் எதிரே இருக்கும் மஞ்சு வீட்டில் அமர்ந்திருக்கிறாள் சசி....
எனக்கு தெரியும்.. ஆமா.... எப்டிடி உங்கம்மாவ சம்மதிக்க வைச்ச.... என்றாள் மஞ்சு....
அவ்வப் போது வாசலில் எட்டி எட்டி தியேட்டரை பார்த்துக் கொண்டாள் சசி....
நான் அவனை கட்டிக்கலன்னா வேசி ஆகிடுவேன்னு மிரட்டினேன்.... எங்கம்மா பயந்துடுச்சு..... என்றாள் கண்களை உருட்டி.....
ஏய்.... நீ பெரிய கைகாரிடி..... உன்கிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் என்றாள் மஞ்சு....
மணி இரவு 12........
சாலையில் ஒரு ஆள் இல்லை.. பனி பெய்யும் காலமிது....குளிர் கொன்று கொண்டிருக்கிறது..... ஸ்வெட்டர் போட்டு, தலைக்கு ஸ்கார்ப் கட்டிக் கொண்டு தான் மஞ்சுவுடன் படுத்துக் கொண்டிருந்தாள் சசிகலா....இந்த விஷயத்தை ரவியில் அன்றே சொல்லத் தோன்றியது.. அவளும் மாலை 7 மணியிலிருந்து அவனை பார்த்து விட முயன்று கொண்டிருக்கிறாள் ....இப்பதாம்மா போறான்.... இப்ப வந்துருவான்.. இப்படியே மணி 12 ஆகி விட்டது....
இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது...... சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக..... பாடல் நன்றாக கேட்கிறது..... அவனின் புன்னகை, பூக்களாக, அருவியாக, அலையாக அவளின் மீது விழுவதாக நினைத்துக் கொண்டாள் ...
மெல்ல எழுந்தாள் ..மஞ்சு தூங்கிக் கொண்டிருந்தாள்... கதவை திறந்து கொண்டு சாலைக்கு வந்தாள் ..எப்படியும் அவன், இப்போதோ, அல்லது கொஞ்ச நேரத்திலோ தியேட்டருக்குள் அல்லது தியேட்டருக்குள்ளிருந்து வந்தே ஆக வேண்டும்..... எப்படியும் விஷயத்தை சொல்லி விடலாம்.... சந்தோசப் படுவான்.....
காதலில் சாத்தியமாகிறது எதுவும்.... நல்ல இருட்டு.... தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஸ்ட்ரீட் லைட் கடந்த வாரம் முதல் எரிவதில்லை... அது வசதியாய் இருக்கும், இன்று அவனை சந்திப்பதற்கு என்றெல்லாம் மனம் தவித்தது....கன்னாபின்னாவென யோசிக்கிறது கன்னியின் மனம்....அவனைப் பார்க்க வேண்டும்.. விஷயத்தை சொல்ல வேண்டும்.. விடிதலுக்கான நேரம் வெகு தூரத்தில் இருப்பதாகவே பட்டது.. அதுவரை யுகமாகிப் போகும் தனிமை....
அதோ.. அந்த வண்டியாகத்தான் இருக்கும்.. அதே தான்.. வெள்ளைக் கார்.... என்பதற்கான வெளிச்சத்துடன் வர... சட்டென சாலையை கடக்க முயற்சிக்கையில் காண நேர கணக்கில் இந்தப் பக்கம் இருந்து படு வேகமாய் வந்த மணல் லாரி அவளை மோத ....அட இல்லை.. அதற்குள் சுதாரித்துக் கொண்டு, இன்னும் வேகமாய் மீதம் இருந்த பாதி சாலையை கடந்து.......
க்ரீச்
.........................................................
........ ப்ரேக்.... பிடிக்கப்பட்டது..... ஆனால் அவள் மீது மோதி டப் டப்... என ஓரிரு சத்தம்.... லாரி போன வேகத்தில் அந்த சத்தமும் கேட்டிருக்காது....
வண்டியை விட்டு இறங்கி பார்த்த சந்திரன், ஓடி வந்து வண்டியில் ஏறினான் .. மாப்ள இறங்காத.. ஆள் காலின்னு நினைக்கறேன் ...மேட்டர் ராணிடா ...... நைட்ல அவதான் இப்படி சுத்திட்டு திரிவா....
சசி குப்புற விழுந்து கிடந்தது...... தலையில் மூடிக் கிடந்த ஸ்கார்ப்..ஸ்வட்டர் .. அடையாளத்தை மறைத்திருந்தது....
மாப்ள.... லாரில அடி பட்டு செத்ததாவே இருக்கட்டும்.. வண்டிய தியேட்டருக்குள்ள விடு என்றான் சந்திரன்.....
நடுங்கி கொண்டே வண்டியை உள்ளே விட்டான் ...
படம் முடிந்து, மக்கள் கூட்டம் வெளியே வர, கண்ணில் பட்ட சசியை ஒரு மாதிரி அனுமானித்து சில நல்ல உள்ளங்கள் தூக்கி, அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து ..........................
விடிந்திருந்தது........
சந்திரனிடம் புலம்பிக் கொண்டிருந்தான்..... அந்த பொண்ணு, அதுவா வந்து உள்ள விழுந்துடுச்சுடா ... நான் என்ன பண்றது....?சரி விடு மாப்ள.. யாருக்கும் தெரியாது.. நீயா உளறிடாத.. மணல் லாரிக்காரனுங்க எப்பவுமே ஸ்பீடுனு எல்லாருக்குமே தெரியும்.. கேஸ் அப்பிடியே திரும்பிடும்....
மூச்சிரைக்க ஓடி வந்து நின்றான், கேண்டீனில் வேலை செய்யும் பாபு...
அண்ணே, நேத்து நைட் அடிபட்டு செத்தது சசிகலாக்காண்ணே .......................
டயரை ஓங்கி ஓங்கி உதைத்தபடியே கத்தி அழுதான் ரவி.......
அந்த லாரி மௌனமாய் நின்று கொண்டிருந்தது...... விபத்துகளின் கோர முகத்தை தாங்கி கொண்டு......