தாய்க்கு ஒரு தாலாட்டு

பத்து மாதம் சுமந்த பின்னும்
பக்குவமா நீ வளர்த்த
பசியோடு நான் அழுக
பட படத்து நீ துடித்த !

கெட்ட வழி போயிடாம
புத்தி மதி சொல்லி வச்ச !
நல்ல வழி நான் போக
நல்ல நெறி நெஞ்சில் தச்ச !

ராவெல்லாம் கண் முழிச்சு
நானுறங்க கதையும் சொன்ன
பள்ளிக்கூடம் போகயில
போற வழி பாத்து நின்ன !

வீடு சேர நேரம் ஆனா
வீதியிலே சோர்ந்து நின்ன
பகலெல்லாம் கஷ்டப்பட்டு
படிக்கும் போது தாங்கி நின்ன !

பழசையெல்லாம் நீ குடிச்சு
பகட்டா என்ன வாழ வச்ச
நல்ல உடை நான் உடுத்தி
கௌரவமா நடக்க வச்ச !

பயணமொன்னு போகையிலே
பார்வையிலே ஆசி தந்த
பத்திரமா நான் சேர
சாமிகிட்ட வேண்டி நின்ன !

படிச்ச புள்ள வாழணும்னு
பட்டினமும் அனுப்பி வச்ச
பார்க்க வீடு வந்த போது
பாசத்தோடு பொங்கி வச்ச !

என் அறியாத வயசில நீ
பாடி வச்ச ஆரிரரோ
என் அடிமனசை வருடிக்கொண்டு
ஆனந்தமாய் கேட்குதம்மா !

எழுதியவர் : ஜெகதீசன் (27-Nov-13, 8:52 am)
பார்வை : 247

மேலே