உள்ளம் ஒரு கோவில்

உள்ளம் ஒரு கோவில்.
திருப்பதி மலையப்பா—உன்
திருவடி துணையப்பா
இருப்பது நிலையப்பா—அது
ஏழையின் மனதப்பா.
உண்டியல் நிறைத்திட்டேன்--நான்
உன்னருள் கரைந்திட்டேன்.
உண்டியும் கொடுத்திட்டேன்—ஏழை
உளம் நிறைக்க மறந்திட்டேன்.
அன்னமும் தானமும்—நான்
ஆயிரமும் செய்திட்டேன்.
எண்ணமும் நிறையவும்—ஏழை
இதயமதும் மறந்திட்டேன்.
தேரதுவும் இழுத்திட்டேன்—நான்
தெருவெல்லாம் பூவிட்டேன்.
ஊர் வாழும் வறுமையில்—ஏழை
உழலுவதும் மறந்திட்டேன்.
பட்டுனக்குக் கட்டிட்டேன்—நான்
பகட்டினைக் காட்டிட்டேன்.
ஒட்டுத்துணி ஒட்டாத—ஏழை
உறுபிணி மறந்திட்டேன்.
தோரணங்கள் அமைத்திட்டேன்—நான்
ஊருக்கும் காட்டிட்டேன்
தெருவினில் படுத்துறங்கும்—ஏழை
இருப்பதும் மறந்திட்டேன்.
ஊரெல்லாம் கூட்டிட்டேன்—நான்
ஊர்கோலம் செய்திட்டேன்.
ஊரினில் ஒரு கோவில்—ஏழை
கூரையை மறந்திட்டேன்.
கோவிலும் கட்டிட்டேன் —நான்
கோபுரமும் உயர்த்திட்டேன்.
உண்மையில் உன் கோவில்—ஏழை
உள்ளமதும் மறந்திட்டேன்.
மலையேறி வந்திட்டேன்—நான்
தலையுனைத் தேடிட்டேன்
இலையெனப் புரிந்திட்டேன்—ஏழை
மனத்தேற மறந்திட்டேன்.
கொ.பெ.பி.அய்யா.