உயர்வுக்கு வழி

தனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடு
தன்னால் முடிந்ததை தானமிடு
தன்னுள் சக்தியைப் பெருக்கிடு ....!!!

மூடநம்பிக்கை முறித்துப் போடு
மூத்தோர் வார்த்தை மதித்திடு
மூர்க்க குணத்தை விட்டுவிடு .....!!!

மனசாட்சியின் குரலை மதித்திடு
மதவெறி நிச்சயம் தவிர்த்திடு
மண்ணில் மனிதம் காத்திடு .....!!!

நானென்ற அகம்பாவம் விடு
நானிலத்தில் நற்பேரை எடு
நல்லெண்ணம் தழைக்கப் பாடுபடு .....!!!

குணக்குன்றாய் நீயும் திகழ்ந்திடு
குனிதலின்றி நிமிர்ந்து நின்றிடு
குரோத உணர்வைக் கொன்றிடு.....!!!

பசியுற்றோர்க்கு அன்ன தானமிடு
பரிகாசம் செய்வதை நிறுத்திடு
பழிவாங்கும் நினைப்பை விரட்டிடு .....!!!

பொறாமை உணர்வை ஒழித்திடு
பொறுமை என்றும் காத்திடு
பொய் பேசுதலை விடுத்திடு ......!!!

நன்றி சொல்லப் பழகிடு
நடுநிலையாய் தினம் நடந்திடு
நல்ல பேரை எடுத்திடு ......!!!

செய்யும் தொழிலைப் போற்றிடு
செருக்கு வேரோடு களைந்திடு
செலவில் சிக்கனம் காத்திடு ....!!!

உயிர்களிடம் கருணை காட்டிடு
உள்ளத்தில் அன்பைப் பெருக்கிடு
உன்னத வாழ்வை வகுத்திடு ......!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Nov-13, 10:17 am)
பார்வை : 169

மேலே