நதிகள் நனைவதில்லை

நீரால் நிறைந்து வழியும்
நதிகள் நனைவதில்லை
வற்றும் வரை வழங்கிடும்
வாழ்ந்திட உயிர்கள் உலகில் !
பாசம் நிறைந்து ததும்பும்
உள்ளங்கள் உலர்வதில்லை
உள்ளவரை உயிர்களிடம்
உள்ளதை பொழிந்திட பூமியில் !
நேசம் நிறைந்து வழியும்
நெஞ்சங்கள் கருகுவதில்லை
நேயமில்லா மனிதர்க்கு
நேசத்தை காட்டிட புவிதனில் !
இரக்கம் நிறைந்து உறைந்திடும்
இதயங்கள் மாறுவதில்லை
இரத்திடும் இதயங்களுக்கு
இரக்கமுடன் உதவிட மண்ணில் !
அன்பு நிறைந்து வழிந்திடும்
அன்பு அகங்கள் வற்றுவதில்லை
அன்பிலா உள்ளங்களுக்கும்
அன்பினை அளித்திட பூமியில் !
அறிவு நிறைந்து நிரம்பிடும்
அறிவு சுடர்கள் அணைவதில்லை
அறிவு இல்லாத அன்பர்க்கும்
அறிவொளியை பரப்பிட உலகில் !
பண்பு நிறைந்து பளிச்சிடும்
பண்பாளரின் ஒளி மங்குவதில்லை
பண்பை அறிந்திடா மனிதர்களும்
பண்பை போற்றிட அவனியில் !
அனைத்தும் நிறைந்த மனங்கள்
அகிலத்தில் நிலைப்பதில்லை
அன்றாட நிகழ்வுகளால் நொறுங்கிடும்
குன்றாத நெஞ்சங்களும் குறைந்திடும் !
பழனி குமார்