கேள்விகள் கேள்விகள் கேள்விகள்

கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.......ருத்ரா
===========================================


கேள்விகள் கேள்விகள் கேள்விகள்....
ஆம் கேள்விகள்!
இலை உதிரா மரங்கள்.
தொங்கிக்கொண்டெயிருக்கும்
கேள்விகள்
உதிரும்போது தான்
விடைகள் ஆகின்றன.
கடவுள் பற்றிய கேள்விகள்
மனிதனிடம்
மனிதன் எழுப்பிய கேள்விகள்
கடவுளிடம்
தேங்கிக்கிடக்கின்றன
தீர்வுகள் தெரியாமல்.
மனிதன் மகிழ்ச்சி கொள்ளும்போது
மத்தாப்பு தான்.
கும்பமேளாக்கள் தான்.
ரங்கராட்டினங்கள் மற்றும்
தெருவோர‌
கலர் கலர் சர்பத் பாட்டில்கள்.
ஈக்களும் கொத்து கொத்துகளாய்
கடவுளர்களின் தூதுவர்களாய்
அங்கு குதூகலிக்கின்றன.
மருந்துக்கு கட்டுப்படாத‌
மரண ஓலங்கள் சூழும்போதும்
மனிதன்
அது மூளிக்கல் என்றாலும்
அதற்கு முகம் பூசி
கண்கள் பதித்து
அதனிடம் நிச்சயம்
மரண கொல்லி லேகியம்
இருப்பதாக‌
பம்பைகள் கொட்டுகிறான்.
காக்கைகள் உக்காரவும்
பனம்பழமும் விழுகிறது.
இது போலவே
மரணம் வந்து விடுமோ என்று
மரணம் வரும் வரை
விழாக்கள் கொண்டாடுகிறான்.
தைப்பூசமும்
பங்குனி உத்திரமும்
லட்சம் லட்சமாய்
மக்களை
மடியில் கட்டிக்கொன்டிருக்கின்றன.
கோடி கோடி மக்களில்
ஒருவனாக‌
எங்கோ எதிலோ
அவன்
கோவணம் கட்டிக்கொண்டு
உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
அவன் உள்ளங்கை ரேகையில்
கோடி கோடி அண்டங்கள்
கோடுகளாய்
குறுக்கும் நெடுக்கும் ஒடுகின்றன.
போதும்
அவனைப்பற்றி
படம் வரைந்து
பாகங்களை குறித்து விட்டால்
பத்துக்கு பத்து மார்க்
கிடைத்து விடும்.
உலகத்து மதங்களும்
அதன் வேதப்புத்தகங்களும்
கேள்வி எண் போட்டு
அடைப்புக்குறிகளில்
மார்க்க செய்து
பரீட்சைக்கு தயார் செய்து
படிப்பது போல்
விடிய விடிய விளக்கு எரியவிட்டு
அவனைப்படித்துக்கொண்டிருக்கின்றன.
கடவுளா?
போங்கடா போக்கத்த பசங்களா
என்று
ஒரு நாத்திகத்தையே
கையணையாய் வைத்துக்கொண்டு
சுருட்டி மடித்துக்கொண்டு
நிம்மதியாய்
தூங்குகிறானே அவன்.

======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (5-Dec-13, 2:21 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 69

மேலே