வெயில் பழம்

சிலநாட்களாய் மழைத்தேன் அருந்தி
மண்டைச்சளி பிடித்துப்போனது எனக்கு

மூக்கோடிப்பிள்ளையைப்போல சினு சினுப்பதாய்
மழையைப்பார்த்து கடிந்துகொள்கிறாள்
பக்கத்து வீட்டுக்காரி

சட்டென்று முல்லை பூ
பூப் பூத்ததைப்போன்று
வானத்தின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆகாயத்தோட்டத்தின்
ஒற்றைப் பழமொன்று
இழுத்து மூடப்பட்ட ஜன்னல் இடுக்குகளினூடே
என்வீட்டுக்குள் கனிந்து வீழ்கிறது !

வைக்கோல் புதரொன்றுக்குள்
புதைத்தெடுக்கப்பட்ட மாங்கனிகளைபோல

இதற்க்குமுன்பும் இப்பழங்கள்
என்வீட்டு முற்றத்தில் வந்து
கொத்துக் கொத்தாய் வீழ்ந்திருக்கின்றன
அப்போதெல்லாம் இந்தப்பழங்களை யாரும் ருசிக்கவோ
அல்லது புசிக்கவோவில்லை

ஏன் எனக்குக்கூட ஒருநாளும்
இந்தப்பழங்களை அள்ளியெடுத்து
ஒரு சுருக்குப்பைக்குள்தானும் சுருக்கிட்டு
முடிந்து வைத்துக்கொள்ள தோன்றியதுமில்லை

நானும் அவர்களைப்போல்தான்
இப்பழங்களைப்பார்த்து
ஈவு இரக்கமின்றி
சரமாரியாய் திட்டித் தீர்த்திருக்கிறேன்
நெருப்புப் பழமென்று !

இருந்தும்
சூடு சொரணை இல்லாத
நம்ஊர் அரசியல்வாதிகளைப்போல் வெட்கமின்றி நான்

வீட்டிற்குள் வீழ்ந்துகிடக்கும் அந்த ஒற்றைப்பழத்தினை
புசித்திட துடிக்கிறேன்

என்னவோர் அதிசயம் !!!

திடீரென்று வாய்முளைத்து
வெயில்பழம் சத்தமாய் சொல்கிறது
வெயிலின் அருமை
குளிரில் தெரியும் என்று !!!

எழுதியவர் : - பிரகாசக்கவி - (8-Dec-13, 9:53 pm)
பார்வை : 86

மேலே