நத்தை வேகத்தில் ஒரு வாழ்க்கை
இசைக்கப்படாத
புல்லாங்குழலைப்போல
மௌனித்துக் கிடக்கும்
இதயத்தின் ராகங்களில் இழையோடிக்கிடக்கின்றன
வாழ்க்கையின் சோகங்கள்
கனவுகளின்
வர்ணங்களை அகற்றி
வாழ்க்கையின் யதார்த்தங்களை
தேடி அலைந்ததில்
தேடாமலே கிடைத்தது
ஈடேராத எண்ணங்களும்
ஏமாற்றங்களும்
எல்லா வானவில்களும்
அழகாகத்தானிருந்தன
கையில் சேராத ஒரு
கண்ணியமான
காதலைப்போல
வாங்கிக்கொள்ள
ஆசைப்பட்டப்போது
சிதைந்து போனது
வானவில் மட்டுமல்ல
வசந்தங்களுந்தான்
மனக்கோழி தன்
ஞாபகக் கால்களால்
கிளறிப்போட்ட
வாலிப குப்பையில்
ஆங்காங்கே
சில முத்துக்களும்
மின்னத்தான் செய்கின்றன
மாலையாகிக் கொள்ளும்
அவசரத்தில்
மயானத்தில் விழுந்தவைகளாக
எங்கோ தொலைந்துபோன
மின்னலில் கண்ணை
இழந்து விட்டு பார்வையை தேடிக்கொண்டிருக்கும்
ஒரு குருடனின்
இருண்ட கண்டமாய்
வாழ்க்கையின் அந்திமம் .
தோளில் சுமக்க வேண்டியதை
இறக்கி வைத்துவிட்டு
சுமக்க வேண்டிய கட்டாயத்தில்
துயரங்களின் சுமைகள்
சுமைதாங்கிகளே
சுமையாகிப்போன
ஜென்மத்தின் தொடர்கதையை
வாழ்க்கை என்னும் பத்திரிகையில்
எழுதிக் கொண்டிருக்கும்
இறைவன் என்னும் எழுத்தாளன்
முடிவு பற்றிய ஆலோசனையில்
காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றான்
எலிக்கு ஜீவன் போவது தெரியாத
பூனையின் விளையாட்டாய்!
என்றாலும்
காலங்கள் வரலாம் என்னும்
கனவுகளோடு வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு ஆமையின்
முதுகில் அமர்ந்து அவசரமாய்
பயணிக்கும் நத்தையைப்போல்!