எடுத்தெறிய வேண்டிய சாத்தான்கள் பற்றிய கனவு
என் உறுதிகளை பறித்தவனிடமிருந்து
காப்பாற்ற முடியாமல் போன
வாழ்வின் இருப்பை நொந்தபடி
நேற்றின் அவமானத்தோடான
அலைச்சலிலிருந்து மீள அயர்கிறேன்
இன்றும் ஒரு கனவு
விழிமடல் மூட விரிகிறது முன்
முதற் பரிமாணத்தில் தந்திரம் மிக்க நரியாகி
பின் மெல்ல சாத்தான்களாவது
விடாமுயற்சியின் பலன்களிலொன்று
என் கனவுக்குள் வருபவர்களுக்கு
எடுத்தெறிய வேண்டிய
சாத்தான்களின் சபையை
நிறைத்திருந்தன நரிக்கூட்டம்
நரிகள் ஓதிய வேதங்கள் ஏதும்
பலிக்கவில்லை செவிடென இருந்த
அரச கடவுளின்முன்
பின் இன்னொரு காட்சி
தொடர் கனவின் பிரதியாய் விரிகிறது
ஒருபக்கம்
வாலுயர்த்தி கொம்புகளை ஆட்டியவாறு
விஷத்துடன் கொடுக்ககல
கருந்தேள்கள் வாசலெங்கும்
மண்மேய்ந்து உலாவ
மறுபக்கம் நாக்கிழும் புழுக்கள்
திரிந்தன எம் நிலமெங்கும்
புனித மண்தேடி...
தாவிக் கழித்து குருத்துப்புல் கொறித்த
முயல் குட்டிகள் இல்லிடமற்று
கறியாடுகளாய் உலையேறுகின்ற
கனவிலிருந்து விழித்தபோது
கட்சி இலச்சினையோடு பல்லிளித்தபடி
நரிமுகத்துடன் ஒரு சாத்தான் என் முன் நின்றது
இம்முறையும் அவனது தேவையொன்றின் நிமித்தம்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.