நாலுபேர் மத்தியில் நானோர் ஏழைதான்
இலட்சங்களும் கோடிகளும்
சேர்த்துவைத்திருப்போர் மத்தியில்
சிலஆயிரம் பணம்கூட சேர்க்கயியலாத
நான் ஓர் ஏழைதான்!
கிலோகணக்கில் தங்கவைர நகைகள்
வாங்கிவைத்திருப்போர் நடுவில்
சிலகிராம் வெள்ளிகூட வாங்கயியலாத
நான் ஓர் ஏழைதான்!
அதையிதை தின்று சகட்டுமேனிக்கு
உடல்வளர்த்து வைத்திருப்போரிடையில்
ஒல்லியாக உலாவரும் தேகமாக
நான் ஓர் ஏழைதான்!
அடுத்தவீட்டுக் காரனைக்கூட
எட்டிப்பார்க்காதவர்களிடையே
எங்கோ அவதிப்படுவோருக்காக வேதனைப்படும்
நான் உள்ளத்தில் பணக்காரன்!
கட்டுக்கட்டாகக்கிடந்தாலும் கிள்ளிக்கொடுக்கக்கூட
தயங்குவோர் இருக்குமிடத்தில்
கொஞ்சமே வைத்திருந்தாலும் அள்ளிக்கொடுக்கும்
நான் மனதில் செல்வந்தன்!
தான்பெற்ற பிள்ளையை தொட்டுப்பார்க்கூட
நேரமற்று அலையும் பலரின்முன்னிலையில்
அடுத்தவீட்டுக் குழந்தையையும் கொஞ்சும்
நான் அன்பில் கோடீசுவரன்!