விடிவு வரும்

புது நெல்லு விளைஞ்சிருக்கு
பொன்னான பூமியிலே
பூங்காத்து தலை தடவும்
பொலிந்து நிற்கும் புதுப் பெண்ணை!
மஞ்சள் வெளியெல்லாம்
கொஞ்சிக் குலுங்குது பார்.
புஞ்சை வயல் காடெல்லாம்
புதுப் பொலிவு பொங்குது பார்.
சேத்து வயல் உழுது
நாத்து நட்டு களைபிடுங்கி
உயிர் கொடுத்து நாம் வளர்த்த
பச்சைப் பயிர்க் குழந்தை
வகிடெடுத்த வரம்பின் மேல்
வாஞ்சாய் தலையாட்டும்.
விழுகின்ற மழைத்துளிகள்
வெள்ளமாய் மாறாதோ
அழுகின்ற பிள்ளைகளின்
தாகம் தணியாதோ
தொழுதன்று விட்ட கண்ணீர்
தோல்வியில் முடியவில்லை!
வாங்காத கடன் இல்லை
ஏங்காத நாளில்லை
தூங்காமல் நாம் உழைத்தோம்
துயர் துடைக்க விளைஞ்சிருக்கு!
பஞ்சம் பறந்து விடும்
பசியாற வழிகிடைக்கும்
குஞ்சு குருமனெல்லாம்
குதூகலிச்சு மகிழ்ந்திருக்கும்!
மொட்டவிழ்ந்த தாமரையாய்
மலர்கின்ற தை மகளே
வெட்டி வைத்த செங்கரும்மாய்-எம்
வாழ்வு இனிக்க வழி செய்யும் அம்மா!

எழுதியவர் : சிவநாதன் (15-Dec-13, 6:18 pm)
Tanglish : vidivu varum
பார்வை : 88

மேலே