பொறுமையின் தேசத்திலிருந்து வந்தவன்

அவன்....
பொறுமையின் தேசத்திலிருந்து வந்தவன்.
அவனுக்குப் புரட்சி என்பது....புனிதமான வார்த்தை.
அதை அவன் அதிகம் தொடுவதில்லை.
"சே குவேரா"-வை...
பனியனில் பார்ப்பதோடு திருப்தியாகி விடுவான்.
"ஊழல்" என்ற வார்த்தை அவனை உறுத்துவதில்லை.
அவனின் அகராதியில்....
அது "அன்பளிப்பு" ஆகி வெகு நாட்களாகி விட்டது.
அவன் கலாசாரத்தின்..."டவுசர் கழண்டு"
வெகு நாட்களாகிவிட்டது.
அது...இப்போது எதையும் தவறில்லை எனக்
குரைத்துக் கொண்டிருக்கிறது.
அவன் சுதந்திரமான தேசம் என அறியப்பட்ட தேசத்தில் வசிப்பதே..."சுதந்திரம்"...
என்று நினைப்பவனாகி விட்டான்.
அவன் விற்கப்படுவதையோ...
வாங்கப்படுவதையோ...பற்றி
அவன் ஒரு போதும் அறிந்து கொள்வதில்லை.
பட்டியில் அடைக்கப்பட்ட விலங்கென
இருப்பது குறித்து அவன் அறிந்ததே இல்லை.
அவன்..."ஆ" என்றால் "ஆடு" என...
ஒரு பலி விலங்கைப்பற்றித்தான் படித்திருக்கிறான்.
"ஆ"...என்றால் "ஆத்திரம் பழகு"
என அவனுக்குச் சொல்லித் தர யாரும் இல்லை.
"ஒரு கன்னத்தில் அடித்தால்..
.மறு கன்னத்தைக் காட்டு" ...என்றுதான்
அவன் வேதங்கள் சொல்லித் தந்திருக்கின்றன.
அவனை வளர்த்தெடுப்பதற்கான ஊடகங்களோ..
அவனை இருக்கையின் நுனியில் வைக்கும்
திகில் திரையரங்குகளாகிவிட்டன.
வாழ்க்கை....
நம்பிக்கையின்மையின் இடமாகிவிட...
அவன் பொறுமையாய் பலிபீடத்தில்...
தன் வரிசை எண் வருவதற்காகக் காத்திருக்கிறான்.
அவனை நீங்களும் குறை சொல்லாதீர்கள்.
அவன் பொறுமையின் தேசத்திலிருந்து வந்தவன்.
அப்படித்தான் இருப்பான்.

எழுதியவர் : rameshalam (17-Dec-13, 3:49 pm)
பார்வை : 78

மேலே