நீங்காத நினைவோடு

சின்ன குடிசை - கடலின்
சிங்கார ஓசை
சில்லென காற்று – கதிரவனின்
சிலிர்க்கும் கீற்று
என்னில்பட்டு
கண்விழித்த போது

அம்மாவின் காலடி ஓசை
அழகான கொலுசின் இசை
இதமாய் கேட்க
பதமாய் மெல்ல
“அம்மா” என்றேன்
“என்ன கண்ணா” என்றாள்
தூங்கியது போதும் என்றாள்
அருகில் வந்தாள் – தலையை
வருடித் தந்தாள் – அம்மாவின்
குளிமஞ்சள் கை வாசம்
என்நெஞ்சில் சேர்த்தது புது வாசம்
ஆனந்தம் மேலோங்க
அழகாய் நான்தூங்க

சிலநொடி நேரத்தில்
பலஅடி தூரத்தில்
பொங்கும் அலைகடல்
எங்கும் அபயக்குரல்
என்னை
அள்ளி எடுத்தவள்
துள்ளி ஓடினாள்
திசை தெரியாது
விசை அறியாது
ஓடினாள் – இருந்தும்
நெருங்கிய அலையால்
நொறுங்கிய நிலையில்
உயர எறிந்தாள்
உயர்ந்த கூரையில்

தலை தாக்கி மயங்கினேன்
நிலை வந்து தலை நிமிர்ந்தபோது
எங்கும் கூக்குரல்
எங்கே என்தாய்க்குரல்
எங்கே போனது எங்களின் குடிசை
எங்கெங்கும் கிடந்தது சவங்களின் வரிசை
என்ன ஆனாள்
என்னை காத்தவள்
தேடித் தேடி கண்கள் பூத்தன
ஓடி ஓடி கால்கள் ஓய்ந்தன

கடைசியில்
கரையில்
சுனாமி அலையால்
சுருண்டு கிடந்தாள் – என்னை
உயிராக வளர்த்தவள் – வெறும்
உடலாக
வருடிய கைகள்
வாடிக் கிடந்தன
கண்ணா என்றழைத்தவள்
கண்மூடி கரையில்
நொறுங்கிப்போய்
நெருங்கியபோது
பீறிட்ட வலிக்கு வடிகாலில்லை
நேரிட்ட கதிக்கு விடிவேயில்லை

தூங்கியதுபோதுமென்றாய் – இனி
துக்கமின்றி தூக்கமேது
தூக்கி எறியாவிட்டால் – நானும்
தூங்கியிருப்பேன் உன்னோடு – இன்று
ஏங்கியிருக்கிறேன் நீர்கண்ணோடு.

எழுதியவர் : செ. சுகுமார் (20-Dec-13, 3:06 pm)
பார்வை : 82

மேலே