மெய்க்காதல்

மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெடியனூர் என்று ஒரு சிற்றூர் உள்ளது. இந்தக்கதைக்கு நெடியனூர்தான் களம்.நெடியனூர் ஊர்த்தலைவராக நெடுமாறன் உள்ளார்.அவருக்கு அறுபத்தைந்து வயது ஆகிவிட்டது, ஆனாலும் துடுக்குத்தனத்தோடும், முடுக்கோடும் தான் இருக்கிறார். அவர் மேல் அந்த ஊர் மக்கள் அளவுக்கு மீறி மதிப்பும் மரியாதையும் செலுத்துகிறார்கள்.அவருக்கு ஒரு துணைவியாரும் , ஒரு மகள் செல்வி, மூன்று மகன்கள் கதிரவன், அழகு மற்றும் முத்து.செல்வி எல்லோருக்கும் மூத்தவள் உள்ளூரிலேயே உறவுக்காரருக்கு திருமணம் செய்து கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துள்ளனர்.
செல்விக்கு ஒன்பதாவது வகுப்பு இறுதித்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் பதினைந்து வயது மகள் செல்வக்குமாரி இருக்கிறாள்.
பட்டிக்காடு பெண் பிள்ளைகுரிய நடை, உடை, பாவனை என இருந்தாலும் கொஞ்சம் வாய் நீளம். அவளை வீட்டில் இருக்கும் ஆச்சியம்மா, எழுபது வயது பாட்டி "
ஏடி கிழிஞ்ச வாயி" ன்னு தான் விளிப்பாள். கதிரவனுக்கு உறவுக்காரப்பெண்ணை மணம் செய்து வைத்து இரண்டு பெண்பிள்ளைகள் ஐந்து வயதிற்குள் இருக்கிறார்கள். அதே போல் அழகுக்கும் உறவுக்காரப்பெண்ணை மணம் செய்து வைத்து இரண்டு ஆண்பிள்ளைகள் ஐந்து வயதிற்குள் இருக்கிறார்கள்.
மாலைப்பொழுதில் சிறு குழந்தைகளோடு விளையாட்டிலே நேரம் செலவழிப்பார் நெடுமாறன்.
கடைசியில் முத்துவுக்கு மட்டும் மணம் ஆகவில்லை. காதல் தோல்வியில் சிக்கி வயது இருபத்தி ஒன்பது ஆகியும் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் வாழ்க்கையின் யதார்த்தத்தை நன்கு அறிந்தவன்.
பத்தாவது வரை படித்து இராணுவம் முயற்சி செய்து முடியாததால் காவலர் பணிக்கு முயற்சி செய்கிறான். ஐயா நெடுமாறன் உயர் மட்ட காவல் துறை அதிகாரிகளை தொலைப்பேசியில் சிபாரிசு கேட்டும் நான் நேர்மையில் தான் பணியில் சேர்வேன் என்று சொல்லி வேலையை வேண்டாம் என்றே சொல்லிவிட்டு வந்தவன் தான் முத்து.

நெடியனூரிலேயே நெடுமாறன் ஐய்யா வீடுதான் பெரிய வீடு என்று சொல்லும் அளவுக்கு நான்கு பத்திகளாகவும் இரண்டு அடுக்குகளாகவும், மனை நடுவில் தாழ்வாரம் இட்டு, வீட்டு நிலைகள் தேக்கினால் செய்து முற்றத்தின் வலப்புறம் பத்து பசுமாடுகள் அலங்காரிக்க இடப்புறம் நாற்றுப் படப்பும், உழவுத்தொழில் உப கலங்களும், இல்லத்தை சுற்றி கோட்டை சுவர் எழுப்பப் பட்டு உள்ளே எப்பொழுதும் ஐந்து பணியாட்கள் வேலை செய்தவண்ணம் இருப்பார்கள்.

காலை நேரம் பத்து மணி முப்பது மணித்திலாயங்கள். செல்வக்குமாரியின் வீட்டிற்கு மிதிவண்டியில் அவசரமாகவே வருகிறாள் அவளின் தோழி மலர்விழி.
கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பாள். மிதிவண்டியில் இருந்து இறங்கிறவள் வைக்கோல் படைப்பில் வண்டியை சாத்திவிட்டு வேகமாக கிந்தி கிந்தி வீட்டின் தலை வாசலுக்கு நடக்கிறாள். ஆம். அவள் ஒரு காலால் சரியாக நடக்க இயலாத மாற்றுத்திரனாளி. ஆனால் மிக்க சிரமத்துடன் மிதிவண்டியை ஓட்டக் கற்றுக்கொண்டாள். நன்றாகவும் ஓட்டுவாள். வீட்டுக்குள் சென்றவள் "
ஏடி செல்வக்குமாரி! எங்கண இருக்கே, இங்க வாடி சீக்கிரம்" என்கிறாள்.
அதற்கு " என்னடி, ஏன்டி கணைக்க... செத்த நேரம் பொறுடி. குளிக்கேமில்ல , இந்த வந்துகிட்டே இருக்கேன்" என்கிறாள் செல்வக்குமாரி. ஏய் ரிசல்டு வந்திருச்சாம்டி, போய் பார்த்திட்டு வருவோம்! என்கிறாள் மலர்விழி.
"அப்படியாடி, பயபுள்ள வத்தியாருக என்னனு போட்டுருக்காகளோ தெரியலையே, அத நினைக்கையில் வயித்தில புளியக்கரைக்கே " என்று தலையை துவட்டிய வண்ணம் வருகிறாள் செல்வக்குமாரி. தனி அறைக்குள் போனவள் பாவாடை தாவணி பட்டு சட்டையில் வீடே மிளிர்ந்தது. இருவரும் புறப்பட்டார்கள். அம்மா ரிசல்டு போட்டுடாகளாம், என்னன்னு போய் பார்த்திட்டு வாரென் என்று அம்மாவிடம் குத்துமதிப்பா சொல்லிட்டு வெளியே ஓடி வர வெளித்திண்ணையில் ஆச்சியம்மா, "
ஏன்டி காட்டுச்சிரிக்கிகளா, எதுக்கு இந்த அவயக்காடு போடுதீக" என்கிறாள்.
எய் கிழவி சும்மா கிட உனக்கு ஒன்னும் தெரியாது சொன்னாலும் புரியாது, பேசாட்ல இரு வாரோம். நல்ல செய்தின்னா சொல்லுதோம். வாரோம் என்று ஆளுக்கொரு மிதிவண்டியில் கிளம்பினார்கள்.

போகிற வழியில் மேலத்தெருவை கடந்து ஒரு கட்டை தொலைவு தார்ச்சாலையில் சென்றால் அவர்கள் படிக்கும் நெடியனூர் அரசு மேனிலைப்பள்ளி வரும்.
மேலத்தெரு மாரித்தாய் " எய் மலரு, செல்வக்குமாரி எனக்கும் சேர்த்து பார்த்திட்டு வாங்கடிகளா. வீட்டில வேல கிடக்கு " என்றாள். மண்டையை ஆட்டிகிட்டு சரி என்கிறார்கள் இருவரும். மேலத்தெரு கடந்ததும் ஒரு ஆலமரம் வரும், அதன் கீழே பிள்ளையார் சம்மளங்கால் போட்டு குத்தகச்சி இருக்கிறார்.
இருவரும் மிதிவண்டியில் இருந்து கீழே இறங்கி, அச்சம் கலந்த வேண்டுதலில் "பிள்ளையாரப்பா! நாங்கள் பத்தாப்பு போக நீதான் துணை இருக்கணும். பாசாக்கி விட்டிரு" என அழாத குறையாக கேட்கிறார்கள். பின்னர் அரசு கட்டிடங்கள் வருகிறது, அங்கேதான் ஊராட்சி மன்ற தலைவராக தாத்தா நெடுமாறன் இருப்பார்.
பிறகு அரசு மருத்துவமனை என கடந்த மிதிவண்டி பள்ளியை நோக்கி விரைந்து செல்கிறது. வலப்புறம் வெள்ளம் வராத ஓடை, இடப்புறம் தோட்டம், துரவு, கிணறு மற்றும் தென்னை மரங்கள் என கொஞ்சம் பசுமை படர்ந்து இருக்கிறது. ஒரு பாலம் கடந்தால் இணையாக ஒரு பாதை வரும், அது தலைவன் கோட்டை செல்லும் வழி.
நெடியனூரின் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்தான். ஐநூறு வாக்காளர்கள் தலைவன் கோட்டையிலும் இரண்டாயுரம் வாக்காளர்கள் நெடியனூரிலும் உள்ளனர். தலைவன் கோட்டையிலிருந்து புன்செயக்கு கூலி வேலை செய்ய நிறைய பேர் வருவார்கள்.
பள்ளிகூடத்தில படிக்கவும் நிறையப்பேர் வருவார்கள். அரசு பள்ளியில் இருந்து தலைவன் கோட்டைக்கு இரண்டு கட்டைகளும் நெடியனூருக்கு ஒரு கட்டை தொலைவும் இருக்கும். பரிதிவேந்தன் மற்றும் பாண்டி இருவரும் பதினொன்றாம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதி முடித்து தேர்வு முடிவு காண வருகிறார்கள்.

பள்ளிக்கூடம்: மாணவ,மாணவிகளின் ஆர்வமும்,ஆர்ப்பரிப்பும், கூச்சலோடு இரைச்சலில் திளைக்கிறது. கூட்டத்தில் கூடம் அலைமோதுகிறது. ஒரு முதன்மை கட்டிடம், நான்கு இரு அடுக்கில் துணைக்கட்டிடம் என்று பள்ளிக்கூடம் அமைந்து உள்ளது. முதன்மை கட்டிடம் தலைமை ஆசிரியர் அறை,அலுவலகம் மற்றும் பத்து அ, ஆ என வகுப்புகளும் நடக்கும். தலைமை ஆசிரியரின் நேரடி பார்வையில் இருக்கவே பத்தாம் வகுப்பு அருகில் இருக்கிறது. அலுவலர்கள் இருவர் உள்ளே தேர்வு முடிவுகளை ஒட்டிக்கொண்டு உள்ளனர். வெளியே காணும் ஆவலில் மாணவ மாணவிகள்.

பத்தாம் வகுப்பு அ பிரிவில் உள்ள கரும்பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படுகிறது. பின்னர் சன்னல் கதவுகள் திறந்து கை எட்டா தொலைவில் வைக்கிறார்கள். சன்னல் வெளிச்சத்தில் எல்லோரும் பார்த்து விட்டு போகிறார்கள்.

செல்வக்குமாரி மற்றும் மலர்விழி பார்கிறார்கள். இருவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். ஆனால் மலர்விழி வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாள். செல்வக்குமாரியோ அடிமட்ட நிலையில் தேர்ச்சி பெற்றாள்.
பள்ளி அலுவலர் செல்வக்குமாரியிடம் வந்து "செல்வக்குமாரி உனக்கு கணக்கு பாடத்திலே முப்பது மார்க்கு தான் வந்ததாம், சார்வாள் தான் போனா போகுதுன்னு பாசு போட்டுருக்காரு, அடுத்த வகுப்பில் நன்றாக படி இன்ன?
என்று சொல்லிவிட்டு போனார். சரி சார் என்றாள் செல்வக்குமாரி.
பரிதிவேந்தனும்,பாண்டியும் பார்த்ததில் பரிதி முதல்வனாக தேர்ச்சி பெற்றிருந்தான். பாண்டியையும் செல்வக்குமாரி போல், ஏதோ பாசாகி விடுகிறான். அவ்வளவுதான். பிறகு எல்லாரும் வீட்டுக்கு நகர ஆரம்பித்தார்கள். செல்வா வகுப்பில் எல்லோரும் பாஸ். மேலத்தெரு மாரித்தாயும் பாஸ். பரிதி, பாண்டி உட்பட எல்லோரும் போய்விட்டனர்.

ஒரு வாரம் கழித்து பள்ளிக்கூடம் திறந்தது.

வழிபாட்டு நிகழ்வு முடிந்து எல்லோரும் வகுப்பறை செல்கிறார்கள். பரிதி வேந்தன் பன்னிரண்டாம் வகுப்பில் வகுப்புத்தலைவர். அதேபோல் செல்வக்குமாரியும் பத்தாம் வகுப்பில் வகுப்புத்தலைவி. அதனால் எழுத்துக்குச்சியும், வருகைப்பதிவேடும் எடுத்க்கொண்டு வகுப்பறை செல்ல வேண்டி தலைமை ஆசிரியர் அறையோடு உள்ள பள்ளி அலுவலகம் செல்கிறார்கள். பரிதி செல்வக்குமாரிக்கு பின்னல் வரிசையில் இருக்கிறான். வருகைப்பதிவேடுகள் அனைத்தும் ஆறாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அ மற்றும் ஆ பிரிவின் கீழ் முறையாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். செல்வக்குமாரியின் வகுப்பு, பத்து "அ " பதிவேடு இரண்டு மணித்திலாயங்கள் தேடியும் கிடைக்கவில்லை இருந்தும் மாறி மாறி தேடினாள். இதனால் பின்னால் நின்றா பரிதி சினம் கொண்டு செல்வக்குமாரியை தள்ளிவிடுகிறான். அவள் தூண் ஒன்றில் மோதி கீழே விழ, பள்ளி அலுவலர் பரிதியை திட்ட, பரிதியோ, "சார் எனக்கு நேரமாச்சி, எவ்வளவு நேரம் தான் இங்க நிக்க, வகுப்பு ஆரம்பிச்சிருச்சில்ல " என்று சொல்லிக்கொண்டே சினம் குறையாதவனாய் எழுத்துக்குச்சியை எடுத்திட்டு போகிறான். விழுந்து எழுந்த செல்வக்குமாரி, "ஏன் இப்படி பிடிச்சி தள்ளுதீக, உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு, ஹட்செம்ட சொல்லுதேனா இல்லையான்னு மட்டும் பாருங்க" சினமுடன் பேசினாலும் அவளுக்கு அழுகையும் வந்துவிட கண்ணீர் அருவி போல் கொட்டுகிறது. நீ யாரிட்டையும் சொல்லிக்கோ எனக்கு கவலை இல்லை என்று அவளை பார்த்து சொன்னவன். சினம் கலைந்து மனம் இறங்கியே "தப்பு செய்திட்டோமோ " என்று தனக்குள் கேட்டவண்ணம் வகுப்பறைக்கு நடக்கிறான்.

செல்வக்குமாரியோ அலுவலரிடம் நான் ரெண்டுல ஒன்னு பார்ப்பேன், தலைமை ஆசிரியர் வரட்டும் என்கிறாள். அலுவலரோ அம்மா தாயி இந்த பத்து "அ "
பதிவேடு உள்ளதான் இருக்குன்னு சொல்லி அவரின் மேசைக்கு அருகில் இருந்து எடுத்து வந்து கொடுக்க " பாத்தீகளா நீங்கள் செய்த தப்பால எனக்குதான் அடிவிழுது" என்று பேசிக்கொண்டு இருக்க, தலைமை ஆசிரியர் வர, விழுந்து எழாத குறையாக ஓட்டம் பிடிக்கிறாள். செல்வக்குமாரி, மலர்விழியுடம் போய் எல்லாவற்றையும் சொல்கிறாள். சினம் குறைந்தபாடில்லை, கரும்பலகை துடைப்பானை எடுத்து இதைவைத்து மண்டையுலேயே அடிக்கணும் என்கிறாள். மலர்விழி, சரிடி விடு பிறகு பார்த்துக்கலாம் என்கிறாள். பரிதிவேந்தனும் பாண்டியிடம் போய் கவலையோடு சொல்கிறான், "ஏலே, பாண்டி தேவையில்லாம பெட்டப்பிள்ளையை போய் நங்குன்னு புடிச்சி தள்ளிட்டமிலே, அந்த பிள்ள தூணுல மோதி விழுந்திச்சிலே, வாழ்க்கையையே வெருத்திட்டேம்லே" என்கிறான் பரிதி வேந்தன். அப்படியால நல்ல அடியாக்கும் ? யார லே தள்ளிவிட்டே ? என்கிறான் பாண்டி. பத்தாப்பு படிக்காள்ல அந்த செல்வக்குமாரியைத் தாம்லே என்கிறான் பரிதி. மதியம் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாடு உண்டபின் குடிநீர் பருக வருகிறார்கள் பரிதியும் பாண்டியும்.. அங்கே அழகாக மரங்களை வரிசையாகவும் அதிகமாகவும் நட்டி வைத்திருந்தனர். மர நிழல் குளு குளுன்னு இருந்தது.
ஏற்கினவே செல்வக்குமாரியும் மலர்விழியும் நீர் பருகிக்கொண்டு இருக்க.
செல்வா சொல்கிறாள் மலரிடம், அந்தா வாரான் பாரு, காலையிலே அவன்தான் என்னை தள்ளிவிட்டான். என்னன்னு கேளுடி ?.
அதற்கு மலர்விழி " போடி நானெல்லாம் கேட்க்க மாட்டேன்,எம்மாடி" என்றாள்.
அதற்குள் அருகில் வந்த பரிதி " எய் செல்வக்குமாரி, மனிச்சிக்கோ. நா செய்தது தப்புதான். மாப்பு என்கிறான். செல்வக்குமாரிக்கு ஒரு மாதிரி இருந்தது. அதற்கு மேல் பரிதியை பேச விடாமல் சரி இருக்கட்டும், நான் அத அப்பவே மறந்திட்டேன் என்றாள். அவ்வளவுதான் மலர்விழி குமைத்து தள்ளிவிட்டாள். "ஏன்டி சீமக்கொழுந்தே! என்கிட்ட ஒரு மாதிரி பேசுற அங்கே ஒரு மாதிரி பேசுற, பெரிய ஆளுதாண்டி நீ " என்கிறாள். அதெல்லாம் இல்லடி என்னதான் இருந்தாலும் ஆம்பிள்ள பயக மாப்பு கேக்கலாமாடி.அதுக்குதான் அப்படி சொன்னேன் என்றாள் செல்வா. எய் என்னடி காதல் கீதல்ன்னு போய்டாமே என்கிறாள் மலர்விழி. அவள் சொன்னதுதான் தாமதம் வெட்கம் சூழ ஓட்டம் பிடிக்கிறாள்.
சாயும்காலம் எல்லாரும் பள்ளிக்கூடம் விட்டு போகிறார்கள். அப்போது பரிதியும் செல்வாவும் ஆவலோடு பார்த்தவண்ணம் புறப்படுகிறார்கள்.

பாண்டி வீட்டில் தாய் மற்றும் தங்கை உள்ளனர். தந்தை தவறிவிட்டார். சாதாரண குடும்பம் என்றாலும் அவர்களுக்கு என்று தந்தை விட்டுப்போனது இரண்டு குறுக்கம் தோட்டம் மட்டுமே. தங்கை நன்றாக படிப்பாள். எட்டாவது முடித்து ஒன்பதாவது வகுப்பு செல்கிறாள். பாண்டி, தாய் சொல்லை கேட்கவே மாட்டான்.
அவன் சொல்வதே சட்டமாக இருந்தது. பரிதி வீட்டில் தாய் , தந்தை மற்றும் தங்கை. தாய் தந்தை இருவரும் கூலி வேலை செய்கிறார்கள். தங்கை பாண்டி தங்கையோடு ஒன்பதாவது வகுப்பு படிக்கிறாள்.

ஞாயிற்றுக்கிழமை அன்று பரிதி, பாண்டி மற்றும் அவன் நண்பர்கள் சிலர் கால்ப்பந்து விளையாட செல்கிறார்கள். பள்ளிக்கூட மைதானம் சாயும் காலம் ஆட்டம் ஆரம்பிகிறது... அழகாக விளையாடுகிறார்கள். ஆட்டம் முடிந்து வீட்டிற்கு செல்கிறார்கள். மறுநாள் காலை பொழுது... பள்ளிக்கூடம் திறக்கிறது. மாலை வேளையில் வீடு திரும்பும்போது மலர்விழி மிதிவண்டியில் இருந்து கீழே விழுந்துவிட பாண்டி ஓடி வந்து அவளை தூக்கி விடுகிறான்.
மிதிவண்டியும் கைப்பிடி சற்று விழ்கிவிட அதை நேராக்கிவிடுகிறான். பின்னர் மலரும் செல்வாவும் விடை பெற்று செல்கிறார்கள். அடுத்த நாள் ஊர்த்திருவிழா நடைபெற பந்தல் கால் நாடுகிறார்கள். அடுத்த வாரம் செவ்வாய் கிழமை கோயில் கொடை. மூன்று நாள் நடைபெறும் சாமி ஊர்வலம், ஆட்டம் பாட்டம், கலை நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, கரகாட்டம் என கலை கட்டும் என்பதில் ஐயம் உண்டோ?

பாண்டி, பரிதி மற்றும் நண்பர்கள் என்று எல்லாரும் நெடியநூருக்கு வந்து கலந்து கொள்கிறார்கள். சாமி ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஊர் சுற்றுகிறான் பாண்டி மற்றும் பரிதி. இருவருடன் படிக்கும் நெடியனூர் நண்பன் மதியழகன்.அவன் வீட்டில் தான் மூவரும் இருப்பார்கள். முதல் நாள் இரவு கலை நிகழ்ச்சியில் பரிதி, பாண்டி மற்றும் மதியழகன் கலந்து கொண்டு கலக்குகிறார்கள். செல்வக்குமாரி, மலர்விழி சிரித்து மகிழ்கிறார்கள்.
மறுநாள் மலர்விழி வீட்டிற்கு செல்வக்குமாரி வருகிறாள். வரும் வழியில் மதியழகன் வீட்டில் பரிதி இருப்பதை பார்த்து போய் பேசுகிறாள். ரெண்டு பெரும் மலர் வீட்டுக்கு வாங்க என்கிறாள். அதற்கு பாண்டி ஏன் உங்க வீட்டுக்கு அழைச்சா ஆகாதோ. என்கிறான். இருந்தும் மூவரும் சிறிது நேரம் கழித்து மலர் வீட்டருகே செல்கிறார்கள். அப்போது ரெண்டு பேரும் வெளித்திண்ணையில் உட்கார்ந்து மருதாணி போட்டுக் கொண்டிருந்தனர். மூவரும் போய் முற்றத்தில் நின்று " என்ன அழச்சீகன்னு வந்தோம். வட பாயசம்னு சோறு போடுவீகளா" ? என்று பாண்டி கேட்க, நாங்க ஒத்தையில இருக்கோம் மலரு அம்மா வெளிய போயிருக்கு என்கிறாள் செல்வா. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கையில் மலரின் அம்மா வருகிறார். என்ன மதியழகா ? இங்கிட்டு ?
என்கிறார். அதற்கு வட பாயசத்தோடு சோறு போடுவீகன்னு வந்தோம் என்றான். வாயா வாங்க காப்பி போட்டு தாரேன். ஆமாம் யாரு இந்த தம்பிகள் என்று பரிதியையும் பாண்டியையும் கேட்க. பாண்டி வேகமா அவர் பின்னாலேயே காப்பி போடுங்க குடிச்சிட்டே பேசுவோம் என உள்ளே போகிறான். மலர் அம்மா காப்பி போட, பாண்டி தன்னை பற்றியும் பரிதியை பற்றியும் சொல்கிறான்.

மலர்விழியும் செல்வக்குமாரியும் திண்ணையில் இருந்து எட்டி பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். பாண்டி சொல்லி முடித்தவுடன் மலர் அம்மா, முகம் மலர்ந்து " பாண்டி அங்கே சுத்தி இங்கே சுத்தி சரியாய் தாம்யா போச்சி, உன் ஆத்தா காரி மலரு அப்பாவுக்கு ஒன்னு விட்ட சித்தப்பா மக்க, அவுகளோட ஆத்தா காலத்திலே பொழிச்சண்டையில வெட்டு குத்து ஆயி ஊரு காரப்பெரியவுக தீர்த்து வச்சாக இன்னிக்கும் ஓங்க ஊருக்கு கிழக்கே எங்க இரண்டு குறுக்க பிஞ்சே தருசாத்தான் கிடக்கு. எதுக்கு வம்புன்னு நாங்க யாரும் அங்கிட்டு போறதே கிடையாது". என்று சொல்ல பாண்டி அப்பண்ணா நீங்க எனக்கு என்ன வேணும் என்கிறான். நா உனக்கு அய்த்த வேணும், உன் அத்தாகிட்ட கேளு சொல்லுவா. அப்படியாத்தே சரி கேட்கேன் என்றான் பாண்டி. காப்பி போட்டு குடிச்சிட்டு புறப்பட்டார்கள். ராத்திரி சாப்பாட்டுக்கு பரிதி தம்பியையும் அழைச்சிட்டு வா பாண்டி என மலர் அம்மா சொல்ல சரி வாரென் என்று சொல்லி கிளம்புகிறார்கள். திண்ணையில் இருந்து எல்லாவற்றையும் கேட்டாலும் கேட்காதது போல் இருந்தார்கள் இருவரும். வெளியே வந்த பாண்டி எய் பிள்ள மலரு போயிட்டு வாரென். நீ ரெம்ப சொந்தமாமில்ல. உன் அம்மா சொல்லுதாக, இனிமேல் நீ என்ன மாமன்னுதான் அழைக்கணும் என்கிறான். அதைகேட்டு மலர் வெட்கத்தில் தலை குனிகிறாள். அவள் அம்மா வழி அனுப்ப எல்லோரும் புறப்படுகிறார்கள். அம்மா பின்னால் நின்றபடி எட்டி பார்க்கிறாள் மலர்.

அன்று இரவு சாப்பிட பரிதி மற்றும் பாண்டி வருகிறார்கள். அப்போது மலரின் அம்மா வரவேற்க, பாண்டி மலரை எங்கே ? என கேட்கிறான். அவ தண்ணி எடுக்க போயிருக்காள். இந்தா வந்திருவா நீங்க வாங்க சாப்பிட என்று இருவரையும் அழைத்து சோறும் சாம்பார் மற்றும் வெஞ்சனம், கூட்டு, பொறியல் பிறகு அப்பளம், வடை கடைசியாக பாயசமும்... சக்கபிடி பிடித்தான் பாண்டி. தண்ணி எடுக்க போனவ வந்து ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் மலர்.
பாண்டி மலரை பார்த்துவிட எய் புள்ள மலரு, இங்கே தான் இருக்கியா? வா சாப்பிடு என்று சொல்ல , நீங்க சாப்பிடுங்கள் நான் சாப்பிட நேரமாகும் என்கிறாள். என்ன இப்படி சொல்லுதே வில்லுப்பாட்டு போட்டுருவாக, விரச போகணும்ல. உன் அம்மாவை அழச்சிட்டு வா புள்ள. சரி நீங்க சாபிடுங்க என்று பரிமாற வருகிறாள். பரிதி அண்ணே நல்லா சாப்பிடுங்க என்று நிறைய வைக்கிறாள். அதற்கு பாண்டி ஏன் எங்களுகெல்லாம் வைக்க மாட்டியா என்று சொல்ல, நான்தான் பார்த்துகிட்டே இருக்கேனே ரெண்டு ஆளுக்கு தின்னாச்சி.
போதும் என்று சொன்னவுடன் வெட்கத்தால் குறுகிவிட்டான். பிறகு பரிதி மலரிடம் கேட்கிறான். மலரு, செல்வக்குமாரி வீடு எங்கண இருக்கு. அவ வில்லுப்பார்க்க வருவாளா? என கேட்க மலரு " அவ வீடு கொஞ்சத்தொலையில தான் இருக்கு நான் போய் கூட்டி வாரென். நான் வரந்தண்டியும் இங்கேயே இருங்க என்று சொல்லி மிதிவண்டியில புறப்படுகிறாள். பரிதி, பாண்டியும் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.ஏலே பரிதி திடீருன்னு செல்வாவை எதுக்கு கேட்க ? பாண்டி கேட்க. அதெல்லாம் ஒண்ணுமில்ல சும்மாதான் என்கிறான் பரிதி. என்னடேய் காதல் தூதா? என்ற பாண்டியிடம் " ஏலே பார்க்கணும் போல இருக்கு அதுக்கு தான் என்றான் பரிதி.
எனக்கு தெரியும் டே என்னைக்கி அவள அடிச்சியோ அன்னைக்கே காதலில் விழுந்தியேடா. எனக்கு தெரியும் நீயா சொல்லுவேன்னு பார்த்தேன் என்றான்.
நீயும் மலரை விரும்புதியா என கேட்ட பரிதியிடம் " அவ எனக்கு அய்த்த மவடா இப்ப நினைத்தா கூட திருமணம்தான் என்கிறான் பாண்டி.

அவசரமாக போன மலர், செல்வக்குமாரி அம்மாவிடம் போய் செல்வாவும் நானும் வில்லு பார்க்க போறோம். இராப்போழுதுக்கு எங்க வீட்டிலேயே உறங்கிகிடுவா ?
என்கிறாள். சரிடி பத்திரமா கூட்டிபோய் காலையில கூட்டி வந்துரு என்கிறாள் செல்வாவின் அம்மா செல்வி. சரி என்று சொல்லி, ஏடி செல்வக்குமாரி வாரியா போகலாம் என்கிறாள் மலர். கோட்டிக்கழுத பொறுடி சோறு தின்னுட்டு வாரென் என்றவள் சோறு போட்டு சாப்பிடலானாள். மலரும் சாப்பிட, விரைவாக புறப்பட்டனர். மிதிவண்டியில் செல்வாவை ஏற்றிக்கொண்டு விரைந்தாள் மலர்.
போகும் வழியில், "பரிதியும் பாண்டியும் உங்க வீட்டுக்கு வந்தாகளா? " என செல்வா கேட்க. வந்தாகளாவா வந்து ரெண்டு பந்திக்கு தின்னு முடிச்சிருப்பாக என்றாள் மலர்.அப்படியா ? என்னடி உன் அம்மா சொன்ன கதைப்படி பாண்டி உனக்கு மாம மகனாகிட்டான். அவனைத்தான் கல்யாணம் பண்ணி வைப்பாகளோ? என்கிறாள் செல்வா. என்னடி அதெல்லாம் சரிப்பட்டு வருமாடி? நானே நல்லா நடக்க முடியாத நொண்டி. அவுக வீட்டுல எப்படி ஒப்புகிடுவாக என்று நொந்து கொள்கிறாள்.
அதற்கு செல்வா, எய் கவலப்படாதடி கண்டிப்பா பாண்டிய கல்யாணம் செய்து நல்லா இருப்பே என்கிறாள். வீடு வந்துவிட மிதிவண்டியை வீட்டுக்குள்ள வைத்துவிட்டு இரண்டு பாயும் போர்வையும் எடுத்துகொண்டு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த பாண்டியும், பரிதியும் உட்பட எல்லாரும் வில்லுப்பாட்டு கேட்க போகிறார்கள்.

- சு. சுடலைமணி (தொடரும்)

எழுதியவர் : சு. சுடலைமணி (23-Dec-13, 10:24 am)
பார்வை : 258

மேலே