பூவை மீது எத்துனைப் பூ?
வாழ்ந்த நாட்களில் வார்த்தையால்த் தூற்றினர்..
வாழ்வில் ஒரு ஓரத்திலும்
வண்ணம் சேர மறுத்தனர்..
நெற்றிக் குங்குமம் அழித்து
விபூதிப் பட்டைக் கொடுத்தனர்..
பட்டாடையைப் பறித்து
வெள்ளாடை சூட்டினர்..
தாலியை அறுத்துத்
தலைவிரி கோலம் ஆக்கினர்..
வளையலை உடைத்து,
வீட்டின் மூளையை
அவளுக்கென ஒதுக்கினர்..
கண்முன்னே வந்தாலோ,
கெட்ட சகுனம் என்றனர்..
சுமங்கலி பூஜையிலிருந்து ஒதுக்கி
அமங்கலி பட்டம் சூட்டினர்..
ராசியற்றவள்,அபாக்யவதி,எனப் பழித்தனர்..
கண்ணீரின் கடைசி சொட்டு வற்றும் வரை
கடுஞ்சொற்களால் தூற்றினர்..
தலைக்குப் பூ வைப்பதையும்
தடுத்து நிறுத்தினர்..
வாழ்வின் சதுரங்கத்தில்
வெட்டுப்பட்டக் காயாக அவள்..
வாழ்ந்த பொழுதுகளில் இகழ்ந்து பேசியவர்,
இன்று மறைந்து விட்டதும்
ஒப்பாரி வைத்தனர்..
ஒற்றைப் பூ சூடவும் மறுத்தவர்,
அவள் பாடை மேல்
மலர்களை மலையாய்க் குவித்தனர்..
இன்று,பூவை மீது எத்துனைப் பூ!