நிலத்தோடு பேசுகிறேன்
நான் போகிறேன்
நிலத்தைச் சந்தித்து பேசப்போகிறேன்
பலகாலமாக நிலத்தினது கதவு மூடப்பட்டிருந்தது
நான் வந்திருக்கும் தகவலறிந்து ஒருவர் கதவைத் திறந்தார்
இவரை இதற்கு முதல் எங்கேயோ பார்த்திருக்கிறேன்
உள்ளே வரும் அனுமதி
இன்னும் உங்களுக்கு தரப்படவில்லை
நீங்கள் திரும்பிப்போகலாம்
என்று அவர் சொல்லிவிட்டு கதவை மூடிச்சென்றார்
கொஞ்சம் நில்லுங்கள்
என்னருமை காதலியின் ஆண்குழந்தை
தன் பாதங்களால் நிலத்தை ஊன்றி நடக்கிறான்
உங்கள் நில மகாராசாவிற்கும்
மகாராணிக்கும் வலித்தனவா? என்று கேட்பதற்காகவே
நானிங்கு வந்தேன்
என் கதையை கேளுங்கள்
ஏன் கதவை மூடுகிறீர்கள்
கதவைத் திறந்து சத்தமாக சிரிக்கிறார்
நிலத்தின் மீது கதவை தயார் செய்பவர்கள் மனிதர்கள்தானே
என்று சத்தமாக சிரிக்கிறார்
என்னால் நிற்க முடியவில்லை
ஆடுகிறேன் போதைகொண்டவன்போல்