பஞ்சத்திற்கென்ன பஞ்சம்
பஞ்சத்திற்கென்ன பஞ்சம்..?!
'பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி'
பறக்குது பறக்குது ஆவல் பாட்டினிலே
புரளுது புரளுது வறுமை ரோட்டினிலே
பஞ்சத்திற்கென்ன பஞ்சம் நாட்டினிலே..!
'பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி' நாட்டில்
பறக்க வேண்டும் பறக்க வேண்டுமெனும் ஆவல்
அரக்கப் பறக்க அவசரத்தில்
அள்ளித் தெளித்த கோலமாகி
அற்பனுக்கு வாழ்வு வந்து வீட்டில்
அர்த்தராத்திரியில் பிடித்த குடையானதம்மா..
நற்பயன் கிட்டிடவே கல்வி
கற்றவனும் உணவுப் பொருளை அபிஷேகமாக
சொற்பஆசையில் வாரி இறைத்து வீணாக
அற்பஆசையிலாத இறையவனுக்குப் படைக்கிறானம்மா..
வாசல் வந்து பசி என்று
வாய் திறந்து கேட்டும் சகமனிதனை
வாய்க்குவந்தபடி ஏ(பே)சி துரத்தி
வயிற்றில் அடிக்கிறானம்மா..
முப்போகமும் விளையாமலில்லை எப்பொழுதும்
எப்போகமும் நாடாதோரில்லை அப்பொழுதும்
பஞ்சம் தலைவிரித்தாடவில்லை சொற்பபொழுதும்..
குடிபெண்போகம் கொண்டலைந்து எப்போதும்
சுயபோகம் கைக்கொண்டு தப்பேதாம் புரியும்
இனபேதம் தலைக்கேறிய திருநாட்டில்
முப்போகமும் விளைகிறது இப்போதும்....
எப்போகமும் நாடாதவரில்லாத அப்போதைவிட
நாற்போகமும் விளைந்தாலும் பசியாறாது
தெருபாகம் குடிநடத்தும் பாமரன் ஏழ்மை
ஒருபாகமேனும் குறையாது வாடுகிறானம்மா...
எங்கோ ஏதோ குழறுபடி
அங்கோ மண்ணில் விளையும் சாகுபடி
இங்கோ விண்ணில் அனுப்பும் ஏற்றுமதி
மங்கா பொருள் ஆதாரம் வளர்க்கும்மதி
தங்காது நாட்டைவிட்டேகும் அயலகமோகமதி
விலகாதிருக்க வறுமைக்கு தூபமேற்றும்சதி
எங்கோ ஏதோ குழறுபடி நடக்குதம்மா..
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
பலப்பல ஜொலிப்பு வடிவங்கள்
சொற்குறைபாடில்லா வாசகங்கள்
ஏட்டினிலும் வாக்கினிலும் வளர்வதுபோல்
வறுமை குறைவிலாது வளருதம்மா...
'பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி'
பறக்குது பறக்குது ஆவல் பாட்டினிலே
புரளுது புரளுது வறுமை ரோட்டினிலே
பஞ்சத்திற்கென்ன பஞ்சம் நாட்டினிலே..!
... நாகினி