இழப்பு
இழப்பு..
காவல் தெய்வம் தூங்கியது
கடமை செய்யத் தவறியது...
நோய் வந்து படுக்கவில்லை
தாய் வெந்து அடிக்கவில்லை
தாகமெடுத்துப் பீர் குடி குடிக்கவில்லை
தாபமெடுத்துப் பிறர் குடி கெடுக்கவில்லை
சாதி ஒழிப்பு போராட்டம்
பாதி அழியா தேரோட்டம்
வீதியில் இழிந்த மனிதநடமாட்டம்
ஆதியில் கழிந்த புனிதத்தடமாற்றம்
மதம் பிடித்த சமூகத்தை
நிதம் கடித்த மிருகத்தை
முடிவாய் இழுத்து மோதி அழித்திடவே
துடிப்பாய் அழுத்தி ஓதி புறப்படவே
கிளர்ச்சி கால்கள் வீதியில் பதிக்க
வளர்ச்சி வேல்கள் விதியில் மிதிக்க
கல் தடுக்கி சில நொடியில்
கால் தடுமாறி விழுந்த உன்னை
காலன் கொண்டு சென்றதெப்படி?
காவல் தெய்வம் தூங்கியது
கடமை செய்யத் தவறியது..!!
... நாகினி