மனிதப் பாவிகளுக்கு - வினோதன்
இறைவனை வேண்டி
வேண்டுதல்கள் வீணானபின்
இரை வேண்டி இரையாகும்
விலைமகள் பேசுகிறேன்,
காது கொடுங்கள் - கொஞ்சம்
கதைத்துவிட்டு தருகிறேன் !
கா"ரண"ங்களும்
மா"ரண"ங்களும்
உண்டெனுக்கு - வலிகள்பல
உண்ட எனக்கு !
விழுந்தேன் - எழவே
முடியாத ஆழத்தில்,
மாண்டு போவதைத்தவிர
மீண்டு போக வழியின்றி !
நான் படும் வேதனைகளை
கண் கொண்டு பார்க்க
இதயபலம் இல்லாத
செந்தழல் சூரியன்
காரிருருள் கரைந்து போவான் !
சாக்கடையைவிட கீழாக
எனநோக்கும் சமூகம்
தன்னுள் எத்தனை - என்
வாடிக்கையாளர்களை
சுமந்து நிற்கிறதென்பது
நானும் நானுமே
அறிந்த இரகசியம் !
பணமே என் நோக்கமெனில்
கல்லுடைத்து பிழைத்திருப்பேன்,
இப்படி கல்லாய் உடைந்தன்று !
சில்லு சில்லாய் சிதறிய என்னை
விடிந்தபின் நானே - பொறுக்கிக்
கொள்கிறேன் - பொறுக்கி
மீண்டும் கொல்கிறேன் !
எனைமீறித் திருடியபின்
பாவப்பட்டு தூவப்படும்
பணத்துண்டுகள் - எப்படி
விலையாகும் ? - அதிலும்
ஏமாற்றுபவனை - அதட்டிக்
கேட்கப்போய் தொழிலாகிறது !
விலைமகள் இவளென
எனையேசும் சமூகமே...
இம்மகளுக்கு விலை
வைத்தது - நீயன்றி
வேற்றுகிரக வாசியா ?
நாங்கள் இக்கணமே
திருந்திவாழத் தயார்
நான் இழந்த வாழ்க்கையை
திருப்பித்தரத் தயாரா ?
எலும்பில்லா பல் தானேயென
ஈவிரக்கமின்றி எனைத்தூற்றும்
எல்லோரின் மூளைக்குமான
ஓர் செய்தி - காதலற்ற காமம்
ஆகப் பெரிய துயரென்பது !
தீராப்பசிகொண்ட
தீய மிருகங்களுக்கு
பரிமாறப்பட்டபின்
எச்சில் இலைகளாக
சுற்றி வருகிறோம்
வெற்று உயிர்களாக !
விபச்சார வீதிகளில்
இடறி விழுந்து
சீரழிந்த - சீதைகளும்
விலை மகள்களா ?
கற்பு மனம்சார்ந்ததென
எப்போது புரியும் - இந்த
மனிதப் பாவிகளுக்கு !
(இது இடறி விழுந்த சீதைகளுக்கானது, தானே விழுந்த தரங்கெட்டவைகளுக்கல்ல.
"இரை வேண்டி இரையாகும்" எனும் வரி தோழி. தாரகையின் "ஒற்றை மலரோ" கவிதையின் 9 வது பத்தியில் இருந்து அனுமதியோடு உருவப்பட்டது என்பதை தெரிவித்துகொள்கிறேன்)