அம்மாவின் மடியென்னும் தொட்டில்

மறக்க முடியாத -என்றும்
மறக்கக் கூடாத நாள்..!

இரண்டு மணி நேரம் ,
இதமான உறக்கம்..!
விரல்கள் தலைக் கோத -தூக்கம்
வரவழைக்க முதுகில் லேசான தட்டல்!
கன்னம் வருடி கனியும்-அன்போடு
நெற்றியில் முத்தம்..!
அண்ட சராசரங்களிலும் பார்க்க-அற்புத
இருட்டு கனவில்!
தூக்கம் மட்டும் அருகில் -துயரம்
எல்லாம் தொலைவில்..!

இருபத்தொரு வருடம் கழித்து-நான்
இரண்டாம் முறைச் சென்றேன்
கருவறை...!

மனித உறவுகளை -தாடிப் போல்
மழித்து விட்டவன் நான்..!
புனித இறைஎல்லாம்-பொய்யென்று
பேசித் திரிந்தவன் நான்..

இயற்கைக்கும் எனக்கும் - இம்மியளவும்
இடைவெளி இல்லாத வாழ்வெனக்கு.
மலரோடுப் பேசி,புல்லோடுப் பழகி-புது
துடுக்கோடு அலைந்தவன் நான்..!

பொரித்த கோழியிடம் குஞ்சை -வாங்கி
சிலிர்த்து முத்தமிடிருக்கின்றேன்..!
எறும்பு வரிசை ஏறக் கண்டு -இமைக்க
மறந்திருக்கிறேன்..!

எஜமானனுக்கெல்லாம் -தன்
நாய் நண்பன்..
என்னூரில் எல்லா நாய்க்கும்-நானும்
அன்பன்..

வானம் பார்த்தும் -மழை பார்த்தும்,
கடல் பார்த்தும் -அலைப் பார்த்தும்,
மரம் பார்த்தும்-இலை பார்த்தும்-கோவில்
மயில் பார்த்தும்-சிலை பார்த்தும்
மணிக் கணக்கில் மயங்கி போனவன் நான்..

புத்தகம் வாசிக்கும் போதோ-புது
பாடல்கள் கேட்கும் போதோ,
கிரிக்கெட் பார்க்கும் போதோ-கவிதையில்
கிறுக்கு பிடித்திருக்கும் போதோ
அருகில் விழுந்த இடிக் கூட கேட்டதில்லைக் காதில்..!

நாலுப் பேர் தேவை என்பார்கள்-நண்பரென்று
மூன்று பேரைக் கொண்டவன் நான்..!
வீதியில் போகும் பெண்ணுக்கு -மதிப்பெண்
சொல்லாதவன்..
என்றும் மதிப் "பெண்" மீது கொள்ளாதவன்.

பள்ளியில் ஏட்டுப் புத்தகம் வாசித்ததே குறைவெனக்கு,
நூலகத்தில் கேட்டுப் புத்தகம் வாசித்ததே-அதிகம்
நெஞ்சில் இருக்கு..!

பஞ்சமா பாதகத்தில் மரணம் தழுவும் வரை
மாதுவோ, கொலையோ, களவோ-மறந்தும்
புரிகிலேன்...
இறுதியாய் இணைந்ததது-மதுவும்..!
"பொய்" சில நேரம் தவிர்க்க முடியாதது-சில நேரம்
தவிர்க்க கூடாதது..!

தினமொரு விடியலிலும்-ஆகாயம் பார்த்து
"தினகரா" : 'இன்று மரிக்கும் உயிரெல்லாம்
சிவனடி சேரட்டும்..பிறக்கும் உயிரெல்லாம்
இனிதே வாழட்டும்'-இது என் சூர்ய நமஸ்க்காரம்..!

சிவன் பால் எனக்கு தனியே ஈர்ப்பில்லை-இவனை
தவிர்த்தால் எனக்குள் தமிழில்லை..!

காதலில் வசப்பட்டேன்-காதலியால் உணர்ச்சி
வசப்பட்டேன்..
நோதலில் வெந்தேன் நான்-பிறந்த நோக்கத்தை
உணர்ந்தேன்..

இனி போதும் எனக்கு-இந்த
மனித வாழ்க்கையின் பற்று..

இத்துனை ஞானமும் இரு மணி நேரம்
அம்மாவின் மடியில்-- உறங்கிய போது
உள்ளத்தில் விழித்தது..!

வேலைப் பளுவோ, வேண்டாத நினைப்போ,
வீணான கவலையோ,விரும்பாத-ஒன்றோ
தீண்டாமல் காப்பாய் இறைவா..!

இனி எந்நாளும்-நெஞ்சு
அசைப் போடும்....
"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க வேண்டுமென் தாய்"

ரா.தர்ஷன் (வாலி) — .

எழுதியவர் : வாலி (30-Dec-13, 8:10 pm)
சேர்த்தது : ராவணன் தர்ஷன்
பார்வை : 93

மேலே