என் வாழ்க்கை பயணம்

நகரத்தாராக நான் பிறந்தேன்,
நலமாக நான் வளர்ந்தேன்.
நகரத்தார் என்பதிலே எனக்கு என்றும் பெருமை.

தாய் தந்த பொறுப்பும்,
தந்தை தந்த செல்வமும்,
குரு கொடுத்த கல்வியும்,
கடவுள் காட்டிய கருணையும்,
என் வாழ்வை நிலை நாட்டியவை.

குலம் கொடுத்த பெருமை,
நான் பெற்ற சிறப்பு.
பிறந்த குடும்பம்,
என் வாழ்வின் சிறப்பு.
முன்னோர் செய்த தர்மம்,
தலை முறை காத்திடும் புண்ணியம்.

பெற்ற கல்வி என்னை வழிநடத்தியது,
உற்ற துணையாய் என்றும் காக்கிறது.
தடம் மாறாமல் பாரம்பரியமாய் நின்ற பயன்,
இறைப்பயனாய் வாழ்வில் ஒளி கூடியது.

சொக்கேசன் மதுரையிலே குடிகொண்ட வாழ்க்கை.
மனை வாழ்க்கை தந்த மகிழ்ச்சி,
மக்கட் செல்வம் மூன்று.
மாறுபட்ட கருத்து வந்த போதும்,
மனம் ஒன்று பட்டதாலே,
தினம் கண்டோம் நெகிழ்ச்சி.

பிள்ளைகள் பெயர் சொல்லப் பிறந்தன,
சொன்ன சொல் கேட்டதாலே,
கல்வியில் உயர்வு, வாழ்கையில் சிறப்பு.
மனையாளின் சிறப்பு,
பிள்ளைகளின் வளர்ப்பு.

தொழிலில் தொய்வு கண்ட போதும்,
நிலையாய் நின்றதாலே, இடர்கள் நீங்கின.
வாழ்க்கைப் பாடம் வழி காட்டிட,
வரும் நாட்கள் மகிழ்ச்சி கூடியது.

உண்மை நிலைபெறா காரணத்தால்,
உற்ற உறவுகள் உண்மையாகவில்லை.
பணமே பிரதானம் என்பாரிடயே,
சொந்தம் பந்தம் உறவாவதில்லை.

மனம் நிறை செல்வம்,
வளம் தந்த வாழ்வு,
ஏற்றம் இறக்கம் இல்லாத,
மாற்றம் அற்ற வாழ்க்கை.

கண் கண்ட தெய்வம், கவி மதுரை மீனாட்சியும்,
தினம் காத்திடும் பேரா தண்டயுதபாணியும்,
என் வாழ்வின் ஆதாரங்கள்,
எனை வாழ வைக்கும் தெய்வங்கள்.

நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும்,
வற்றாத அன்பும், நீங்கிடும் தீமையும்,
கொடுத்து உதவும் குணமும்,
மாறிடும் பகையும், நான் பெற வேண்டும்.

மீனாட்சி தாயே !
நான் கேட்க்கும் வரமும், வளமும், தர வேண்டும்.
அனுதினமும் காத்து அருளவேண்டும்.

எழுதியவர் : arsm1952 (30-Dec-13, 8:16 pm)
பார்வை : 869

மேலே