அம்மா - நாகூர் கவி

கருவில் இருந்த
என்னை
கண் இமைபோல்
காத்தாய்... !
ஈன்றென்னை தூக்கி
அன்பு முத்தங்களோடு
அமுதூட்டினாய்... !
எனை
சிற்றெறும்பு
கடிக்க வந்தால்
எரிமலையாக
சீற்றம் கொள்வாய்... !
மார்பில் என்னை
அணைத்து வைத்து
தமிழ் தாலாட்டு
பல இசைப்பாய்... !
சோறும் பாலும்
ஊட்டியே
சோர்வடையாமல்
எனை காப்பாய்... !
அப்போ அப்போ
பாடல் மழையை
வானைப்போல பொழிவாய்... !
எந்தன் விழிகளோ
அழுதிட நேர்ந்தால்
உந்தன் கன்னங்கள்
இரண்டும் நனைந்திடுமே... !
பள்ளி சென்று
துள்ளி வருவதை
அக்கம் பக்கம்
வீட்டில் வசிப்போரிடம்
தினம் சொல்லி சொல்லி
களிப்படைவாய்...!
தீயப் பண்புகள்
என்னுள் வராமல்
சல்லடையாக
சலித்திடுவாய்...!
அப்பா கொடுக்கும்
பணத்தை எல்லாம்
எனக்கு மட்டுமே
படையலிடுவாய்... !
சிறு சிறு பணிகள்
உனக்கு செய்தால்
அடிக்கடி சில்லறை
காசும் தருவாய்... !
உடல்நிலை
சரியில்லையென்று
படுத்து விட்டால்
உன் உள்ளமோ
என்றும் உறங்காதே...!
என் தலைதனை
சுமக்கும்
தலையணை உந்தன்
மடியன்றோ... ?
எந்தன் உடலை
வளர்த்து வளர்த்து
உந்தன் தேகம்
தேய்ந்து போனது... !
எந்தன் உயிரை
காத்து காத்து
உந்தன் உயிரும்
பறந்து போனது...!