கண்ணீர் மேகங்கள்

சிவப்புச் சூரியன்
வெள்ளை நிலவு
நீல வானம்
என்ன பாவஞ்செய்தேன்?
நான் மட்டும் கருப்பு என்று
கருமேகம் அழுது தீர்த்த
மிதமிஞ்சிய கண்ணீர் - மழை



அது
தேநீர்க் கடைக்காரனின்
தேவபாஷை.
பலசரக் கடைக்காரனின்
நீச பாஷை.


தலைவர் சிலைகளைக்
குளிப்பாட்டும் ஆகாயத்து ஆயா.
வள்ளுவக் குரளகத்தின்
இரண்டாம் அதிகாரி.



மழையே!
பருவப் பெண் காதல்போல்
நீயும் எப்போது வருவாய்
தெரியாது. பின்பு
மொத்தமாய் பெய்து
எங்கள் நதிகளின்
கொள்ளளவு கூட்டுவாய்
தெப்பமாய் நனைந்து
எங்கள் ரதிகளின்
உள்ளழகு காட்டுவாய்.


கிராமத்து மண்தரையில்
பல்லாங்குழியில் பறிப்பாய்
கூரைத் துளையில் புகுந்து
எம் ஏழையரிடம்
குசலம் விசாரிப்பாய்
வாக்குறுதிக் கச்சேரி
அலுத்துப் போனால்
356- ஐப் பிரகடனஜ்செய்து
பொதுக் கூட்டம் கலைபாய்.




உன்னால்
எம் கோயம்பேட்டு வியாபாரிக்கு
காய்கறியும்
மாறி மாறிக் கிடைக்கும்.


உனக்கொன்று தெரியுமா?
உன் பேய்த்தாண்டவத்தைவிட
நிவாரணத் தொகை நெரிசலில்
நாங்கள்
மாண்டதே அதிகம்.
அதற்காகவேனும்
அளவாய்ப் பேய்.

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு) (5-Jan-14, 9:59 pm)
Tanglish : kanneer megangal
பார்வை : 90

மேலே