மனிதன் சிந்திக்கவே மாட்டானா
உங்கள் மீது
அருட்கொடைகளை
வானத்திலிருந்தும்,பூமியிலிருந்தும்
இறக்கி வைத்து
உணவளிப்பது யார்?
உங்கள் மீது
அருட்கொடை புரிந்து
உணவளிப்பவனை விட்டு விட்டு
எவ்வாறு நீங்கள்
திருப்திபட்டுக் கொள்கிறீர்கள்...?
.....
வானத்தையும்
பூமியையும்
முன்மாதிரியின்றி நூதனமாகப்
படத்தவனின் பேராற்றலை
அறியவே மாட்டீரா...?
.....
எல்லாப் பொருட்களையும்
படைத்தது யார்..?
யாவற்றையும்
முற்றும் அறிந்தவன் எவன்..?
யாவற்றின் மீதும்
ஆட்சி அதிகாரம் செலுத்த
வல்லமை மிக்கவன் யார்..?
அறிவின் முடிச்சை
அவிழ்த்து அறிய முற்படுவீரா..?
.....
கர்ப்பப் பையில் செலுத்துகின்ற
விந்தை நீங்கள் பார்த்தீரா..?-அதனை
குழந்தையாக படைப்பது
நீங்களா? -அல்லது
இறைவனா?
......
நீங்கள் பருகும்
மேகத்து நீரை கவனித்தீர்களா.?
அதை நீங்கள் இறக்குகிறீர்களா..?
அவன் இறக்குகிறானா..?
அவன் நினைத்தால் நீங்கள்
அந்நீரை குடிக்க முடியாத படி
உப்பு நீராக ஆக்கியிருந்தால்
என் செய்வீர்..!?
இதற்காக நீங்கள்
நன்றி செலுத்த வேண்டாமா..?
.......
இறந்தவற்றிலிருந்து
உயிருள்ளதையும்
உயிருள்ளவற்றிலிருந்து
இறந்தவைகளையும்
வெளிப்படுத்துவது யார்..?
.....
அதிகாலை நேர வெளிச்சத்தை
இரவின் இருளிலிருந்தும்
வெளிப்படுத்துவது யார்..?
பகலை இரவிலும்
இரவில் பகலையும்
புகுத்துவது யார்..?
.....
இரவை ஓய்வெடுப்பதற்கும்;
சூரியனையும் சந்திரனையும்
காலத்தின் கணக்காகவும்
ஆக்கியது யார்..?
இது யாவற்றையும் மிகைத்தோனும்
முற்றும் அறிந்தவனுடைய
ஏற்பாடேயன்றி வேறு எது.!?
தெளிவான அத்தாட்சிகள்
கண்ட பின்னும் சிந்திக்க மாட்டீரா..?
....
ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதும்
ஆட்சி அதிகாரத்தை
கழற்றி விடுவதும் யார்...?
கண்ணியப்படுத்துவதும்
இழிவுபடுத்துவதும் யார்..?
......
மறைவானவற்றின்
திறவுகோல்கள்
எவனிடமுள்ளது..?
கடலிலும், கரையிலும்
உள்ளவற்றையும்
அறிந்தவன் யார்..?
....
ஓர் இலை கூட
அவனறியாமல் உதிர்வதில்லை
ஒவ்வொரு செயல்பாடுகளும்
அவனுடைய பதிவேட்டில்
இல்லாமலில்லை..!
.....
இரவில் உங்களை
மரணிக்கச் செய்து
பகலில் அவனே உங்களை
எழுப்புகிறான்...பின்னர்
இறுதி மீளுதலும் அவன் பக்கமே!
அப்பால் நீங்கள்
உலகில் செய்து கொண்டிருந்தவற்றை
உங்களுக்கே அறிவிப்பான்
...
உங்கள் நன்மைகளும்
தீமைகளும்
உங்களுக்கே வெளிச்சமாக்கப்படுவதையும்
அறிய மாட்டீரா..?
...........
எத்தனையோ உயிரினங்கள்
தம் உணவுகளை தன் முதுகில்
சுமந்து செல்வதில்லை
அப்படியிருக்க
அவற்றுக்கு உணவளித்து
உயிர் நீட்டிப்பவன் யார்..?
.....
உங்கள் கேள்விப் புலனையும்
உங்கள் பார்வைகளையும் எடுத்து விட்டு
உங்கள் இதயங்கள் மீதும்
முத்திரையிட்டு விட்டால்
இறைவனைத் தவிர
அதனை உங்களுக்கு
கொண்டு வருவது யார்..?
சிந்திக்க வேண்டாமா.?
......
உலக முடிவு நாள் வரை
இரவை நிரந்தரமாக்கினால்
இறைவனன்றி உங்களுக்கு
வெளிச்சத்தை கொண்டு வருபவர் யார்..?
உலக முடிவு நாள் வரை
பகலை நிரந்தரமாக்கினால்
நீங்கள் ஓய்வெடுக்க
இரவை கொண்டு வரும் கடவுள் யார்..?
இதனை சிந்திக்க வேண்டாமா?
......
அத்தாட்சிகளை
எவ்வாறு விவரிக்கிறோம்
இருந்தும் சிந்திக்காமல்
புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்..?
.....
நிராகரிப்போர்க்கு
வேதனை இறக்கப்படும் போது
அவர்களுக்கு உதவி செய்யும் கூட்டம்
அவர்களுக்கு இருக்கவில்லை..!மேலும்
அவர்கள் தன்னைத்தானே
தற்காத்துக் கொள்ளும்
ஆற்றலும் கொண்டிருக்கவில்லை..!
......
இறைவனுடைய
கட்டளை நிறைவேறுவது
கண்மூடி விழிப்பது போன்று
ஒரு கணமே தவிர தாமதமில்லை...!
....
நிச்சயமாக பூமியிலுள்ள
மரங்கள் யாவும்
எழுதுகோல்களாக இருந்து
கடல்நீர் முழுவதும் மையாக
எழுதினாலும்.....
இறைவனுடைய வார்த்தைகள்
எழுதி முடிவடையமாட்டா.......
.....
நிச்சயமாக இறைவன்
யாவற்றையும் மிகைத்தவன்
மிக்க ஞானமுள்ளவன்
பேராற்றலும்
பெருங்கருணையும் கொண்டவன்
பொறுமை கொண்டு தண்டிப்பவனும் அவனே
மிக்க அன்போடு மன்னிப்பவனும் அவனே!
......
சிந்திப்போர்க்கு
நிச்சயம் நேரான வழியுண்டு!