கோபம்

`இயல்பாகவே போர்க்குணமுள்ள மிருகம்தான் மனிதன்` என்கின்றார் சிக்மண்ட் பிராய்டு. `மனிதன் அந்தப் போர்க்குணத்தை கட்டுக்குள் வைத்திருக்க வாழ்நாளெல்லாம் கற்றுக்கொள்கின்றான். அதற்கான வடிகால்தான் கோபம்` என்கின்றார் அவர்.
ஒருமுறை முகமது நபி (ஸல்) தன் தோழர்களிடம் கேட்டார். " இந்த உலகத்திலேயே தைரியசாலி என்று யாரை நீங்கள் கருதுகின்றீர்கள்?"
"இதில் என்ன சந்தேகம்? போர் முனையில் வீரத்தோடு சண்டை போடுகிறார்களே அவர்கள்தான் தைரியசாலிகள்" என்றார் ஒரு தோழர். மற்றவர்களும் அவர் சொல்வதை ஆமோதித்தார்கள்.
முகமது நபியோ `இல்லை` என்று அதை மறுத்தார்.
"கோபம் வரும்போது எவனொருவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றானோ அவன்தான் தைரியசாலி " என்றார்.
கோபத்தை அடக்கிக்கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நெஞ்சுரம் வேண்டும். அதற்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் கோபத்தை அடக்கவும் முடியாது. நியாயமான காரணங்களுக்காக கோபப்படுவதில் தப்பில்லை.சிலநேரங்களில் கூடவிருக்கும் மனிதர்களே சிறு பிரச்சினைகளைப் பெரிதாக்கி `எரியும் தீயில் எண்ணெய்` விட்டு உசுப்பேத்தி விட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால், இவற்றையெல்லாம் கடந்துபோகப் பழகுவதுதான் நம் உடம்புக்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.
புத்தரிடம் ஒருவன் வந்தான். அவரைக் கண்டபடி திட்டினான். திட்டிக்கொண்டே இருந்தான்.பகவான் புத்தர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை.
`என்னடா இது ! நாம் இவ்வளவு திட்டுகிறோம். இவர் கல்லுப் பிள்ளையார் போல சிரித்தபடி அமர்ந்து இருக்கிறாரே. !` என்று அதிசயப்பட்டுப் போனான். தன் சந்தேகத்தை அவரிடமே கேட்டான்.
"சுவாமி! நான் இவ்வளவு கோபத்தோடு திட்டியும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே..! எப்படி?"
" நீ எனக்கு ஒரு தட்டு நிறைய உணவும், பழங்களும் கொடுக்கிறாய். நான் அதை ஏற்றுக் கொண்டால்தானே அது எனக்குச் சொந்தம். வேண்டாம் என்றால் அது உனக்கே திரும்பிப் போய்விடும், உனக்குச் சொந்தமாகிவிடும் இல்லையா ? அதுபோல நீ எனக்குக் கொடுத்த வசைச் சொற்களையும் நான் ஏற்கவில்லை.அது உனக்கே சொந்தமாகிவிட்டது சரியா..?" என்றார்.
இந்த மனநிலை நமக்கு வாய்க்கவேண்டும். நாய் நம்மைக் கடித்தால், நாம் அதைத் திருப்பிக் கடிக்கமுடியுமா..? சேற்றில் கல் எறிந்தால், சேறு நம் மீது படும்தானே....! கொஞ்சம் பொறுமை காத்தால் கோபத்தை விரட்டுவது எளிதாகிவிடும்.
--------------------------------------------------------------------
(ஆதாரம்- திலகவதி அவர்களின் `கோபம்` சம்பந்தமான ஒரு உளவியல் கையேட்டிலிருந்து குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளைத் தொகுத்து அளித்துள்ளேன். )