என்றும் சாகாத பிறப்பின் விடியல்
கண்ணில் விழும் தூசிபோலல்ல
கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல்
நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்;
அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும்
திருப்பியடிக்க இயலாத என் கையில்தான்
எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்..
கையை வெட்டியெறிவதை ஏற்காது
உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள்
தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது..
வீட்டை எரிக்க இயலா வன்மத்தில்
பாரபட்ச நெருப்பு பற்றியெரிய
வீட்டிற்குள்ளேயே உயிர் புதைத்துக் கொள்கிறோம்,
வாசனைதிரவியங்களை மேலடித்துவிட்டு
எங்கே நாற்றம்’ எல்லாம் பொய்யென்று
நாடகமாடுகிறது அரசியல் நாற்காலிகள்..
இங்குமங்குமாய் கால்பரப்பி
கோடு தொடவே பயந்து
எல்லைமீறல் குற்றமென்று நம்பி
இன்னும் -
தூரநின்று கல்லெறிபவர்களாகவேயிருக்கிறோம் நாங்கள்;
இனி துணிந்து ஒரு தீர்மானம் எடுப்பதற்குள்
யாரிருப்போமோ இல்லையோ ஆனால்
எங்களின் உணர்வுகள் விதைகளாய் எமது
அடிநெஞ்சிலெங்கும் விதைக்கப்பட்டிருக்கும்..
நாளைய தலைமுறையின் கோபம்
அந்த விதைகளிலிருந்து
மீண்டும் மீண்டும் முளைக்கும்,
நாற்றமெடுத்த எங்களின்
பிணத்து மீதிருந்தேனும்
விடுதலைக்கான கிளர்ச்சி துளிர்த்தெழும்,
கூட்டு கூட்டாய்
விஷகுண்டுகளில் பொசுங்கிப்போன
எம்முறவுகளின் ஓலம் நினைவையரிக்கும்,
மானத்தில் சூரியனைச் சுடுமெம் பெண்களை
நிர்வாணப்படமெடுத்த கைகளையும்
நெஞ்சில் மிதித்த கால்களையும்
ஒடித்தெறியவேனும்
எம் மண்ணில் எமக்கான விடியல் பிறக்கும்..