ஒரு உண்மையான உணர்ச்சிமிக்க காதல் கடிதம்

அன்புள்ள முன்னாள் காதலிக்கு...,

உன்னை நித்தம் நினைத்து முற்றத்து விளக்குமாறாய் தேய்ந்துபோன உனது முன்னாள் காதலன் எழுதிக்கொள்வது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உனை சந்தித்தேன். இது உனக்கு நினைவில் இருக்காது அப்படி இருந்திருந்தால் அதற்க்கு ஏதாவது வேறு காரணம் உன் சார்பில் நீ வைத்திருப்பாய். உனை முதன் முதலில் கண்டவுடனேயே காதல் பிறந்துவிட்டது கூடவே கருமாதியும் முடிவாகிவிட்டது. அன்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அத்தனையும் அழகான நிமிடமாகவே கழித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் என் காதல் சொல்ல நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா....?

ஒருமுறை நீ நடந்து செல்லும்போது உன் சொடுகு நிறைந்த தலையில் இருந்து விழுந்த பேன் ஒன்றை கண்டெடுத்து அதை உன்னிடம் திருப்பி தரும்போது நீ என்னைப்பார்த்து "க்கியூட் போய்" என்று சொன்னபோது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை தெரியுமா...? ஆனால் அதற்கான அர்த்தம் எனக்கு இன்னும் தெரியாது தெரியுமா. இதற்காகவே எனது நண்பர்களுக்கு ஒரு மாதம் தொடர்ந்து பார்ட்டி கொடுத்தேன்.


அதுமட்டுமல்ல என் அழிந்துபோன காதலியே... ஒரு நாள் நீ உனது சைக்கிள் பஞ்சர் ஆனதும் உன் பாதம் நிலத்தை முத்தமிட்டு நடந்து சென்றதைப் பார்த்து ஜிஞ்சர் சாப்பிட குரங்காய் மாறிப்போனேன் தெரியுமா...? உடனே ஓடிவந்து உனை அப்படியே அழகாக தூக்கி சென்று விட நினைத்தேன், ஆனால் நான் ஏற்கனேவே நாலு ரவுண்ட் உள்ள விட்டு எனை நாலுபேர் தூக்கும் நிலையில் இருந்ததால் அத்திட்டத்தை கைவிட்டேன்.

ஆனால் அதன் பிறகும் நான் எனது காதல் முயற்ச்சியை கைவிடவில்லை... ஒருநாள் உன் பாட்டியோடு நைட்டி போட்டபடி நீ நள்ளிரவு நேரம் உங்க அக்கா வீட்டிற்கு போய் வரும்போது, நாலுபேர் உன்ன பார்த்து நாதரித்தனம் பண்ணிடுவாங்க என பயந்து போய் வேட்டியோட நான் முச்சா போனது உனக்கு தெரியாது காதலி தெரியாது. இப்படியெல்லாம் தனக்குத்தானே தானே நொந்துபோன நான் கடைசியா ஒரு தீவிர முயற்சியில இறங்கினேன்.

ஒருநாள் நீ பாடசாலை முடிந்து பசியோடு வீடிற்கு போகும்போது பதறியடித்த என் உள்ளம ஓடிப்போய் ஒரு குச்சிமிடாய் வாங்கி வந்து உனது கையில் கொடுக்கும்போது உனது அண்ணன் அதைப்பார்த்து விட்டு. எனை தனியாக அழைத்துச்சென்று ஏண்டா எனக்கும் கொடுக்கல என்று எனை கும்மு கும்மு என கும்மினானே அப்போகூட உன்மீது நான் வைத்த காதல் மாறவில்லை தெரியுமா...?

கடைசியா உன்வீட்டில உனக்கு கல்யாண பேச்சு எடுத்தபோது, தாங்கமுடியாமல் நான் தற்கொலை பண்ண உன்னிடம் ஐடியா கேட்டபோது, பல்லி விழுந்த சாப்பாடு சாப்பிட்டா விஷம் ஏறி நீ செத்துடுவ என சொன்னாய், நானும் ஒன்றா ரெண்டா எத்தனையோ பல்லிமிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஆனா என் உயிர் எனைவிட்டு போகல, அதற்க்கு பதிலா நீதான் எனை விட்டு சென்றுவிட்டாய். உனக்கு ஒழுங்க தற்கொலை செய்வதற்கும் யோசனை சொல்ல தெரியவில்லையே என்று எத்தனை நாள் நான் தனியாக அழுதிருக்கிறேன் தெரியுமா...?

ஆனால் நீயோ இன்று எனை ஏமாற்றிவிட்டு இன்னொருவரை திருமணம் முடித்து அது சரிவராமல் மறுமணமும் முடித்துவிட்டாய். ஆனால் நானோ உனை காதலித்த பாவத்திற்காய்... குடியும் கும்மாளமுமாய் வாழ்க்கையை அனுபவித்து திரிந்தவன், இன்று ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சென்று எனது குடும்பத்தைப் பார்த்து முகத்தில் தாடி வைக்ககூட நேரம் இல்லாமல் இருக்கின்றேன். இதில் எந்த லட்சணத்தில் உனை நினைப்பது.

இருந்தாலும் இந்த மடல் மூலமாக எனது காதல் வலிமையையும் என் மனதையும் திடப்படுத்தி எதிர்காலத்தில் இப்படியொரு சரித்திரகாதல் இருந்தது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்த கடிதமாகும். எனவே காதலியே இந்த கடிதம் உன்கரம சேரும்போது. நான் எனது புது மனைவியுடன் தேனிலவு சென்றிருப்பேன். நீ எங்கிருந்தாலும் வாழ்க வாழ்க வாழ்க...!

என்ன நண்பர்களே கடிதம் எப்படி இருந்தது... வரலாறு ரொம்ப முக்கியம் இல்லையா...? அது மொக்கையா இருந்தா என்ன சப்பையா இருந்த என்ன... நீங்க இந்த பதிவ படிக்கும்போது சிரித்திருந்தா அப்படியே கருத்தையும் வாக்கையும் ஒரு கும்மு கும்மித்து போங்க.....!

எழுதியவர் : நா.நிரோஷ் (9-Jan-14, 11:07 am)
பார்வை : 445

மேலே