பெயருக்குப் பஞ்சம்

ஜில்லா மறைந்து மாவட்டமாகி
ஏறக்குறைய அரைநூற்றாண்டு!
மறைந்து தொலைந்த சொல்லை
புதுபித்து புத்துயிர் ஊட்ட
சீர்கெட்டுப் போனதா
செம்மொழியாம் நந்தமிழ்?
தமிழ்த் தவிர பிறமொழிகளில்
சொல்லாக்கத் திறன் குறைவு;
வேறுவழி இல்லாத காரணத்தால்
கடன்வாங்கிய சொல்லையெ
பயன்படுத்தும் நிலையுண்டு.
அலி அரவாணி என்ற இழிவான
சொற்கள் மறைய
திருநங்கை எனும்
அழகான சொல் வரவில்லையா?
கம்ப்யூட்டருக்கு கணினி
லேப்டாப்புக்கு மடிக்கணினி
மொபைல் ஃபோனுக்கு
அலைபேசி, செல்பேசி
கைபேசி போன்ற சொற்கள்.
பிறமொழிகள் தடுமாறி
வேறுவழி அறியாமல்
திணரும்நிலை நந்தமிழுக்கு
இல்லை அய்யா திரைநெறியாளர்களே!
தமிழில் சொல்லாக்கம் கரிப்பில்லா
கடல்நீர் போல் பரந்து விரிந்தது.
சீரிளமை குன்றாத செந்தமிழில்
செத்துவிட்ட சொற்களின்
எலும்புகளைப் பொறுக்கி
உயிரூட்ட முனைவதை
தமிழன்னை பொறுப்பாளா?

(படத்தின் பெயர் தமிழ்ப் பெயராக இருந்தால் சிறப்பு. நான் அந்தப் படம் சம்பந்தப்பட்ட யாரையும் குறை சொல்லவில்லை)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (9-Jan-14, 10:27 pm)
பார்வை : 1068

மேலே