மரணத்தின் காத்திருப்பு 4

முன் பதிவின் சுருக்கம். அகால மரணமடைந்த அவளின் அன்புக்குரியவனின் பாதச்சுவடைப் பின்பற்ற எண்ணி கடலில் இறங்கும் அவள் உயிர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவளின் நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது...........

********************************************

மருந்தின் வீரியத்திலாலோ, மனச்சோர்வினாலோ, நீண்ட நேரம் கண்ணயர்ந்திருந்த அவள் மெல்ல விழித்தாள். ஒருகணம் எங்கிருக்கின்றோம் என்று குழம்பித்தான் போனாள். சுற்றுமுற்றும் பார்த்தவள், தான் இருப்பது மருத்துவமனை படுக்கையில் என்பதை உணர்ந்தாள். கடலோடு போகவிருந்த உயிரை இப்படி வலுக்கட்டாயமாக கொண்டு வந்து கட்டிலில் கிடத்தியிருக்கின்றார்களே.. நெஞ்சு கரித்துக் கொண்டு வந்தது. மனம் ஓவென்று ஓலமிட்டது. அப்படியே மெதுவாக எழுந்தவள் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து, திறந்திருக்கும் சன்னல் வழியே பார்வையை செலுத்தினாள்.

நிர்மலமான வானம், வெளுத்திருந்தது அவள் முகத்தை போல். "வெண்மேகங்களே என் மன்னவனிடம் என்னை சேர்க்காமல் விதி என்னை இங்கு கொண்டு வந்து விட்டதே" உதடுகள் துடிப்பதை மனது உச்சரித்தது. எண்ணங்களில் சிதறாமல் வந்து குவிந்தது அவன் நினைவுகள். கூடவே அவள் வாழ்க்கையின் அலைகளும் சிந்தனைகளில் சீறிப் பாய்ந்தன.

சிறுபிராயத்திலேயே பெற்றோரை இழந்து, தாத்தா பாட்டியின் அன்பில் வளர்ந்து, கல்வியில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்று, தம் கால்களில் நிற்கும் வலுவை அடைந்து, அதற்காகவே காத்திருந்தது போல், தாத்தா பாட்டி இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடியை சேர்ந்திட்ட வேளையில், தமக்கு இனி சொந்தம் என்று யாருமே இல்லையே என மனம் வேதனைப்பட்டாலும், தன்னம்பிக்கையை தளரவிடாமல், பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி, ஒரு பத்திரிகை நாளிதழில் துணையாசிரியராகப் பணியாற்றி, தமக்கு மிகவும் பிடித்தமான கதை கவிதை எழுதுவதில் மும்முரமாக முனைந்து, ஓரளவு பிரபலமாகி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்ட வேலையில் தான் இறைவனால் அவளுக்காக சிருஷ்டித்த ஆணாய் கண்ணன் அவள் வாழ்வில் இனிதாக நுழைந்தான்.

இணைந்த இதயங்கள் தொடரும்......

தொடரும் பாகம் 5ல்


பெ.மகேஸ்வரி.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (10-Jan-14, 7:28 am)
பார்வை : 105

மேலே