மரணத்தின் காத்திருப்பு 3

முன்பதிவுகளின் சுருக்கம்: அவளை உயிராய் நேசித்தவன் அகால மரணம் அடைந்துவிட்டான். அவன் பாதச் சுவடை பின்பற்ற முடிவெடுத்து, ஆரவாரிக்கும் கடலில் இறங்கிவிட்டாள். மூச்சுதிணருகையில், அவளைத் தழுவும் இருகரங்களின் சொந்தக்காரன் தம் அன்பன் என்ற நிம்மதியில் உணர்விழக்கின்றாள்....


அழகிய பளிங்கு மாளிகை அதீத வெண்மையில்.....
சொர்க்கத்தின் வாசல் அகல திறந்து இருக்கின்றது.
வானத்து தேவதை ஒருத்தி அவளை மெல்ல அணைத்தபடி,
அழைத்து செல்கின்றாள் உள்ளே....
இருபுறமும் மல்லிகைபூக்களை அவள் மேல் தூவியபடி
நின்றிருந்த குட்டித் தேவதைகளின் அணிவகுப்பு அவளுக்கு
மட்டில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது....

சற்றே நிமிர்ந்து பார்க்கையில், பரவசப்பட்டு போனாள்..
அவளின் ஏகபோக சொந்தக்காரன் வெண்மையான ஆடையில்
இளவரசன் போல் ஆண்மையின் கம்பீரத்துடன் காதலுடன்
இருகரங்களை நீட்டியபடி அவளை நோக்கி மென்னகைப் புரிந்தான்.

காற்றில் பறப்பது போன்ற உணர்வு... கால்கள் தரையில் தொடவில்லையோ...
ஒடினாளா...? பறந்தாளா...? சில்லென்ற குளிர்ந்திருந்த மேனியை சிலிர்த்தபடி
நாணமும், பயமும் ஆசையும் இழுத்துப் பிடிக்கும் கால்களை உதறியபடி
வேகமாக அடியெடுத்து வைத்தவள், ஆடை தடுக்கி அப்படியே தலைக்குப்புற
கீழே விழுந்தாள்.

விழுந்தவள் சில நொடிகளுள் சமாளித்து எழுகையில் எல்லாமே மாறிவிட்டிருந்தது.
அவளை மெல்ல தூக்கியிட்டவள் தேவதையாக இல்லை, தாதியாக இருந்தாள். பளிங்கு மாளிகை மருத்துவமனையாகவும், வெள்ளை நிறப் படுக்கைகளும், வெண்மையான உடையணிந்து மருத்துவரும் அவள் அருகில் நின்றிருந்தார்கள்.

விழிகளை விரித்துப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் கசக்கி, துடைத்து விழித்துப் பார்த்தாள். அவள் இருப்பது மருத்துவமனைதான். விக்கித்து நின்றாள். விடை தெரியாமல் தவித்தாள். அவளின் உயிரானவனின் அணைப்பிற்குள் அடங்கியவள் எப்படி இங்கே.. கண்ணா நீ எங்கே.. தாரைதாரையாய் கண்ணீர் வழிந்தோடியது.

அவளை ஆதரவுடன் அணைத்தப்படி இருந்த தலைமைத்தாதி, கடலில் மூழ்கிச் சாகக்கிடந்தவளை ஒரு இளைஞர் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்ததாகவும், மருத்துவர்களின் பெரும் முயற்சியில் அவள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக விவரித்தார்.

"ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்? ஐயோ, இறைவா ஏன் என்னை இப்படி சோதிக்கின்றாய்? என் கண்ணான கண்ணனின் அருகாமையில் சேர்ந்துவிட்டேன் என்று பூரித்து நின்றேனே.. எல்லாம் கனவாகி விட்டதே..." " ஐயோ, என் அன்புக்குரியவர் தான் என்னை அணைக்கின்றார் என்று புளகாங்கிதம் கொண்டேனே.. அது யாரோ ஒருத்தரா? எவ்வளவு புத்தி பேதலித்து இருந்திருந்தால், இன்னொருவர் எனை அணைக்க இடம் கொடுத்திருப்பேன்"
விம்மி விம்மி அழுதாள் அவள்...

"உம்மைக் காப்பாற்றியவர் மாலை வந்து சந்திப்பதாக சொல்லிச் சென்றார்" என்று கூறிய தாதி, அவளைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன் கடமையைச் செய்ய சென்றாள். "சந்திப்பதா... முடியாது,, அந்த யாரோ ஒருவர் தன்னைச் சந்திப்பதா...
முடியவே முடியாது" மனதிற்குள் அறிவை வலுக்கட்டாயமாக திணித்து யோசிக்க முற்பட்டாள்.... அப்படியே கண்ணயர்ந்தாள்.

முடிவை நோக்கி......

தொடரும் பாகம் 4ல்....

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (10-Jan-14, 7:25 am)
பார்வை : 90

மேலே