ஜோடிப் பொருத்தம் - சிறுகதை பாகம் 2
இதுவரை:
நந்தினியாகிய நானும் சக்தியும் நெருங்கிய தோழிகள். ஜெனி எங்களுக்குத் தோழி ஆகின்றாள். ஜெனியின் தோழி மூலமாக சிவாவைப் பற்றி எங்களுக்கு தெரியவருகின்றது.
இனி:
ஜெனி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள். சற்று யோசித்த பின், இதற்கு மேல் சொல்லாம் இருக்க முடியாது, நாங்களும் விடமாட்டோம் என்பது அவளுக்குத் தெரியும் என்பதனால், சிவாவை நான் காதலிக்கின்றேன் எங்கள் ஊர் பக்கம் தான் அவன். தினம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் சந்தித்துக் கொள்வோம். அரசு ஆண்கள் கல்லூரியில் படிக்கின்றான். நான் செல்லும் பேருந்தில்தான் அவனும் வருவான் என்று கூறினாள். உங்களிடம் சொன்னால் ஊருக்கே சொல்லிவிடுவீர்கள் என்ற பயத்தில் தான் சொல்லவில்லை என்றாள்.
நல்ல செய்தியை நாலு பேர் காதில் போட்டு வைத்தால் தானே அது உங்க வீட்டுக்கு சீக்கிரம் போய் சேரும். அப்பதானே ஆகா வேண்டிய காரியமும், நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும் என்றேன் நான் கிண்டலாக. இதுக்குத்தான் நான் சொல்லவில்லை என்றாள் ஜெனி. நீ இப்பொழுது எங்கள் தோழி ஆயிற்றே, சரி யாரிடமும் சொல்லவில்லை, அவனை எங்களுக்கு அறிமுகப் படுத்திவை என்றேன். அவளும் அடுத்தநாள் அறிமுகப் படுத்துகின்றேன் என்றாள்.
அது சரி அவன் பெயர் என்ன என்று நான் மறுபடியும் கேட்டேன். சிவா என்றாள் அவள். "ஜெனி" "சிவா", மிகவும் பரிச்சயமான பெயர்களாக இருக்கின்றதே என்று தோன்றியது. எனக்குள் இருக்கும் கலைஞி அப்பொழுது விழித்துக் கொண்டாள். சட்டென்று நினைவிற்கு வந்தது. இது "குஷி" படமாயிற்றே என்று தோன்றியது. படம் பார்க்க மட்டம் போட்டு மாட்டிக்கொண்ட சம்பவமும் நினைவிற்கு வந்தது. படம் பார்த்துவிட்டு வந்த அடுத்தநாள், அந்த படத்தை வகுப்பறைக்கே நாங்கள் ஒருமுறை ஒட்டிக் காட்டினோம். ஜெனி - சிவா ஜோடிப் பொருத்தம் படு பிரமாதம் (Tom & Jerry போல) என்று விமர்சனமும் செய்துகொண்டிருந்தோம். அன்றுதான் அவளாகவே எங்களுக்கு உதவி செய்து தோழி ஆனாள். அன்று அந்த கதையைக் கூட எங்களிடம் மறுபடியும் சொல்லக் கேட்டாள்.
எப்போது முதலில் சந்தித்துக் கொண்டீர்கள். எப்படி காதலர்கள் ஆனீர்கள் என்றெல்லாம் கேட்டோம் நாங்கள். சொல்லுவேன் ஆனாள் திட்டக்கூடாது என்று பொறி வைத்தாள். சரி சொல் திட்ட மாட்டோம் என்றோம் நாங்களும். எதற்காக நாங்கள் அவளைத் திட்ட வேண்டும். அவள் என்ன தவறு செய்தாள் என்ற சிந்தனையும் எனக்குள் இருந்தது. சரி என்னதான் சொல்கின்றாள் என்று நானும் மும்மரமாகக் கேட்க ஆரம்பித்தேன்.
கல்லூரியில் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே பேருந்தில் அவன் என்னைப் பார்க்கின்றான் என்று எனக்கு தெரிந்தது. நானும் கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் காலை பேருந்து ஏறும் பொழுது என்னிடம் ஒரு நோட் கொடுத்துவிட்டு இறங்கும் பொழுது வாங்கிக் கொள்கின்றேன் என்றான். ஏறியதுதான் தெரியும் எனக்கு. எங்கே இறங்கினான் என்று தெரியாது பேருந்தில் அவன் இல்லை. பேருந்து நிலையத்திலும் அவன் இல்லை. நம் கல்லூரிக்கு வந்து அதனை திறந்து பார்த்தேன். முதல் பக்கத்தில் சிவா என்று பெயர் இருந்தது. அடுத்தப் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் "ஜெனி", என் பெயர். அந்த பக்கம் முழுவதும் ஜெனி தான். அடுத்தடுத்து பக்கங்களிலும் ஜெனி தான். கடைசி பக்கம் புரட்டினேன்.
"உன்னோடு நான்
வாழ நினைக்கும் நாட்களை
உன் பெயர் கொண்டு நான் எண்ணினேன் என்னுள்"
இப்படிக்கு
- சிவா
என்று எழுதி இருந்தது. முதல் பக்கத்தைப் புரட்டி ஒரு பக்கத்தில் எத்தனை ஜெனி இருந்தது என்று எண்ணிப் பார்த்தேன். பிறகு பக்கங்களை எண்ணினேன். கிட்டத்தட்ட 20000 த்திற்கும் மேல்.
பின் அட்டையில் "எனக்காக குஷி படம் ஒருமுறை பார்க்கவும்" என்றும் எழுதி இருந்தது. அன்றுதான் நீங்கள் இருவரும் அந்த படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள். "ஜெனி" "சிவா" என்று நீங்கள் சொன்ன நாயகன் நாயகியின் பெயரை நான் கேட்டேன். எனக்குள் ஏதோ ஒரு மாற்றம், சிலிர்ப்பு, குழப்பம், பயம், நடுக்கம் இன்னும் ஏதேதோ தொற்றிக் கொண்டன. உங்களிடம் அந்தப் படத்தின் கதையைக் கேட்பதற்காகவே, அன்று தோழியானேன் நான். அந்த கதையை சொல்லும் பொழுது, படத்தில் வரும் பெயர்களை நீங்கள் மாறி மாறி சொல்லக் கேட்டு எனக்குள் காதல் வந்துவிட்டது, என்று முடித்தாள்.
அடிப்பாவி, அப்படியென்றால் அந்த படத்தின் கதையைக் கேட்பதற்காகத்தான் எங்களை அன்று காப்பற்றினாயா, அதற்காகத்தான் எங்களிடம் தோழி ஆனாயா என்று அதிர்ச்சியில் கேட்டோம். அவளும் வெட்கமே இல்லாமல் ஆமாம் என்று சொல்லிவிட்டு மௌனமானாள். எங்கள் இருவருக்கும் அன்று ஒரு மிகப்பெரிய அவமானம் ஆயிற்று. சரி காதல்ல இதெல்லாம் சாதாரணம் என்று எங்களை நாங்களே தேற்றிக்கொண்டோம். தற்பொழுது அவளும் எங்கள் தோழி ஆயிற்றே. ஒன்றும் சொல்லுவதற்க்கில்லை. ஹ்ம்ம் நாளை பார்ப்போம் உங்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கின்றது என்று அவளிடம் கூறினோம் நாங்கள் இருவரும்.
தொடரும்..