ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

பனிபடர் பூமியில் நனிகுளிர
பயிர்களும் பாங்குற செழிப்புற
உழவனின் மனமும் களிப்புற
அகமகிழ்ந்து வரவேற்கின்றேன்
இனிய தமிழ்த் தைப்பொங்கலை...
குறைவின்றி வளம் நிறைந்திருக்க,
கொடும் இனவாதப் பகைகொண்ட
யுத்தம் என்னும் அரக்கனால்
நிம்மதி தன்னை இழந்தே
சிதறுண்டு போனோம் பாரெங்கும்...
பதவியும், அதிகார வெறியும்
பாழ்பட்ட மனதை ஆக்கிரமிக்க,
ஊடறுத்த குள்ளநரிக் கூட்டத்தால்
துண்டு துண்டாகிப் போனோம்
தரணியில் ஒன்றுபட மறந்து ............
வறுமையிலும் செம்மையாய்
அழகாய் சர்க்கரைப் பொங்கலிட்டு
முக்கனியும் பாங்குறவே படைத்து
பண்பாட்டைப் போற்றுகின்றோம்
கதிரவனுக்கு நன்றி செலுத்தி ...........
உதிரத்தில் கலந்த தமிழுணர்வுடனே
அன்பெனும் மந்திரத்தால்
ஒற்றுமை என்றும் தழைத்திட
ஒன்றுபடு தமிழினமே ஒன்றுபடு
தேசம் வென்றிடவே பாடுபடு .....!!!
====================================
தோழி துர்க்கா