கட்டாயக் கண்ணீர்
தெய்வம் கண்ணடைத்துக் கொண்ட
கருணைகளற்றக் காலமொன்றில்
காலனின் கைப்பிடித்துக் கொண்டு
காமுகம் அணிந்து
வெளியே வந்திருந்தது அது
மனுஷம் சிதைக்கும்
மிருகத்துவத்தின் பிரதிநிதியாய்..
தோண்டப்படுகின்ற புதைகுழிகளின்
ஆழத்திலிருந்து வெளியே வருகின்ற
எலும்பு கூடுகளை விதைத்துவிட்டு
சர்வதேச மட்டத்தில்
கொல்லப்பட்ட புறாக்களின்
இறகுகளால் பின்னப்பட்ட
சமாதானத்திற்கான பொன்னாடை
போர்த்திக் கொள்கின்ற சுயநலங்களோடு
சிறகுகள் அடித்துக் கொள்கிறது
அதன் பேராசைகளின் பறவை.
கட்டவிழ்த்து விடப்பட்ட
வன்முறைகளின் கூடாரங்களிலிருந்து
இனப் படுகொலைகளுக்கான
குரோதங்களை குடித்து திளைத்த
ஆணவங்கலோடு இன்னும்
சிறைபடுத்தப்பட்ட இயலாமைகளின்
பரிதாபங்களை பந்தாடிக்கொண்டு
அராஜகங்களின் வேர் பரப்பி
ஒரு ஆலமரமாய்
விழுதுகளும் விடத்துடிக்கிறது
அதன் விசுவாசம்.
பல கைகளின்
கூட்டு முயற்சியோடு
தனது கைகளை பலமாக்கிகொண்ட
வல்லமைகளின் முகவரியோடு
இறுமாப்பெய்தி
சனநாயகம் போர்த்தப்பட்ட
சர்வதிகாரத்துக்குள் நின்று
வேட்டையாடப் பழகிக்கொண்ட
அசிங்கங்களின்
அருவருப்புகளிலான
வெற்றியின் மமதைகள் இன்னும்
நாடகங்களாக ஊடகங்களில்..
தெருக்கோடியில்
நிற்பதற்கும் தகுதியிலா
வரலாறுகளின் சொந்தங்கள்
கோடானு கோடிகளின் சொந்தங்களாய்
நிலைமாற்றம் கொண்ட
கொள்(கை)ளைகளின்மேல்
ஆளுமைகளின் வருணம் பூசப்பட்டு
சுரண்டல் பூங்காக்களில்
அழகாய் சிறகடிக்கின்றது
ஒரு வண்ணத்துப் பூச்சியாய்..
முதுகுகள் நிமிர்த்தும்
தைரியம் தொலைத்த
கோழைத்தனங்களை தூக்கிக் கொண்ட
துணிச்சலோடு
முன்னேற்றங்களின் சின்னங்களை
விலைபோதலுக்கான சபலங்களாய்
மாற்றிக்கொண்ட எதிரணிகளின்
சாதகங்களை மோதகங்களாய்
சுவைக்கப் பழகிக்கொண்ட
ருஷி கண்ட பூனைகளின் சாம்ராஜ்ஜியத்தில்
சுமைகளின் அடுப்பில்
எரிந்துகொண்டிருக்கின்றது
வாழ்க்கை உலர்ந்த விறகாய்..
அபிவிருத்திகளின் பெயரால் சுய
அபிவிருத்திகளில்
தன்னிறைவு அடைந்திருக்கும்
தலைமைகளின்
தனியுடைமைக் கொள்கைகள்
தாராளமயபடுத்தப்பட்டிருக்கும்
அடங்காப்பிடாரித்தனங்களால்
புதைக்கப் பட்டுப்போன
பொதுவுடைமை என்பது
இனி வருகின்ற காலங்களில்
தேசத்தின் கட்டாயக் கண்ணீர்!