ஒன்றுபடுவென்றுவிடு

திரைகடலோடி எங்கும் திரவியம் தேடினாய்!
திரும்பிய திசையெங்கும் புகழ்மணி சூடினாய்!
எக்கரையிலும் உன் ஒற்றுமை பற்றி
அக்கரை கொள்ளாமலேயே ஓடினாய்!

ஒற்றுமை ஒற்றுமை என வுரைத்து
ஒழிந்தன தமிழ்த்தலைவர்கள் வீரர்கள் உடல்!
சொல்வதற்கு வார்த்தை ஏதும் தெரியாமல்
சோகத்தில் நுரைக்கிறது வங்கக்கடல்!

விண்ணுக்குச் செல்லலாம்! விஞ்ஞானம் பயில்லாம்!
சொன்னதெல்லாம் செய்யும் சொற்பநுட்பங்கள் செய்யலாம்!
அவற்றிடையே இதனை மறந்து விடாதே,
நா(டு)தியில்லாத ஒற்றுமையில்லாத ஓர்இனம்நீ!

’முள்ளிவாய்க்கால்’ ஒற்றுமை ஒழித்தத்திற்குக் கிடைத்த
முதல் பரிசின் ஒருவெள் ளோட்டம்!
இனியும் இணையாது போவா யெனில்
இன்றி யமையாது பரிசதின் தேரோட்டம்!

தமிழன்னை கண்ணத்தில் தன்கை வைத்து
கண்களில் நீர் வைத்து காத்திருக்கிறாள்,
என்றாவது தனது பிள்ளைகள் எல்லோரும்
ஒன்றாய்வந்து தன்னைக் காப்பரென!

தனக்கு சரிநிகர் என்று யாதொன்றுமில்லாத
தரணி புகழ்தமிழ் உனக்கென துணையிருக்க
தயக்கத்தின் மயக்கத்தி னின்று விழி-தமிழா
ஒன்றுபடு! உலகத்தை வென்றுவிடு!

---வேல்முருகன் தமிழ்.
14 சனவரி 2014

எழுதியவர் : -வேல்முருகன் தமிழ். (15-Jan-14, 9:50 am)
பார்வை : 81

மேலே