ஜல்லிக்கட்டு

முகநூலில் நேற்று living ஸ்மைல் வித்யா சல்லிக்கட்டு பற்றி ஒரு பதிவை செய்திருந்தார். அது சரி போலதான் தோன்றியது. தமிழர் பண்பாடு என்பது எது ? தமிழர் என்று அடையாளம் காணப்பட்ட அனைவருடைய பண்பாடா ? அல்லது தமிழர் என்று கூறுவதற்குள் இருக்கும் குழுக்களுள் ஏதேனும் ஒன்றின் பண்பாடு , ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாடாகுமா ? சல்லிக்கட்டை தமிழகத்தில் அனைத்து குழுக்களும் நிகழ்த்துகிறதா ? என்றெல்லாம் எனக்குள் கேள்வி எழுந்தது .
எனக்கு தெரிந்தவரை தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் தான் நடக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் 1995 க்கு பின் சல்லிகட்டு தடை செய்யப்பட்டு இருக்கிறது என்று நினைகிறேன். காரணம் அப்போது நடந்த சாதி மோதல்கள் . சாதி இந்துகள் நடத்தும் சல்லிக்கட்டில் தலித்துகள் பங்கேற்க முடியாது. தலித்துகள் நடத்துவதில் சாதி இந்துகள் கலந்துகொள்வதில்லை . இன்னும் சொல்ல போனால் சல்லிகட்டு நடத்த மிகுந்த பொருள் செலவு ஆகும் என்பதால் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் தலித்துகள் நடத்துவதில்லை. மிக அரிதாக ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறுக சிறுக பொருள் சேர்த்து நடத்துவதுண்டு. அதுவும் கலவரத்தில் தான் முடியும் சாதி இந்துவின் மாட்டை கூட தலித் அடக்க கூடாது என்கிற வக்கிரம் தான் சல்லிகட்டை தலித்துகள் தனியாக நடத்த காரணம். சல்லிக்கட்டு வீரவிளையாட்டு எனவும், அது தலித்துகளுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்பதான போக்கு சாதி மோதலுக்கு காரணமாக மறைமுகமாக இருந்து வருகிறது. சல்லிகட்டு தடை பற்றிய செய்தி வந்த போது அலறி எழுந்தவர்கள் தலித்துகள் அல்ல. விளையாட்டுகளிலும் சாதியம் நிலவும் போது , மாட்டை அடக்கி நிருபிக்க படும் வீரத்திற்கு தலித்துகள் உகந்தவர்கள் அல்ல என்பதான தோரணை இருக்கும் போது. ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டாக சல்லிகட்டை கருதுவது சரியாக இருக்காது என்றே நினைகிறேன். சல்லிகட்டு குறித்த விரிவான ஆய்வு ஒன்றை செய்யவேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.

எழுதியவர் : ஞா. குருசாமி (15-Jan-14, 6:12 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 1356

மேலே