ஜான் பென்னிகுவிக்

ஜான் பென்னிகுவிக்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள் இன்று.....ஜனவரி 15..

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்குப் பணிக்கு வந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் , வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதை கண்டார். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். ரூ75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப் பட்டது.அடர்ந்த காடு,விஷப்பூச்சிகள்,காட்டு மிருகங்கள்,கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக்கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளதில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது.இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
முல்லை பெரியாறு அணையால் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.மேலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யும் மக்களின் விவசாயத்துக்காக, அவர்களின் குடிநீர் வசதிக்காக அரசாங்கம் நிதி உதவி செய்ய மறுத்த நிலையிலும், தன் சொத்துக்களையெல்லாம் விற்று `முல்லைப் பெரியாறு’ அணையை கட்டினார்.
வறண்டு கிடந்த தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பென்னிகுயிக்கை தென் மாவட்ட மக்கள் குறிப்பாக தேனி மாவட்ட மக்கள் கடவுளாக வணங்குகின்றனர். உழவுப்பணி ஆரம்பிக்கும் பொழுதும்,அறுவடையின் பொழுதும் அவரின் படத்தை வணங்கிவிட்டு வேலையை ஆரம்பிக்கின்றனர். பென்னிகுயிக்கின் பெயரை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி தங்கள்நன்றியை இன்றும் தமிழர்கள் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிபட்ட ஒரு மாமனிதரின் பெயரை அந்த பகுதி மக்கள் நினைவில் வைத்திருந்தாலும், தமிழக மக்கள் அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவருடைய வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். என்பதே எல்லோருடைய விருப்பம்.....

கம்பம் விஜி.....

எழுதியவர் : கம்பம் விஜி (16-Jan-14, 6:05 pm)
சேர்த்தது : cumbumviji
பார்வை : 535

சிறந்த கட்டுரைகள்

மேலே