யாது ஊரே, யாவும் கேலி

"யாது ஊரே?., யாவும் கேலி!!"
----------------------------------------
மூடத்தமிழா!, எங்கே ஓடுகிறாய்?.,
சிங்களவன் உன் சிண்டை சிரைக்கிறான்,
வங்கத்தில் உன் அங்கம் மிதக்கிறது,
கவரிமானே!!, உனக்கிருப்பது சவுரி முடியா?.

அகரம் ஆய்தம் பயிற்றுவித்த அய்யாக்கள்,
அம்மா!! தாயே!!., என்பது கேட்கலையா? - இல்லை,
அரசுமதுபானக் கடைகள்தனில் கிடைக்கும்,
அறுபதுரூபா சரக்கின், குளிர்ச்சி பத்தலையா?

உழவன் வீட்டில் கஞ்சியில்லை - இன்று
பொன்னித்தாய்க்கு புடவை இருக்கா?
சுரணையென்ற உணர்ச்சி உனக்கு,
நினைவிலாவது மிச்சம் இருக்கா?

பரந்து விரிந்த உலகமெங்கும்,
நீ அடிவாங்கும் இனமடா! - இதை,
பார்த்துக்கொண்டும் குனிந்திருந்தால்,
நீ மனிதனில்லை, பிணமடா!!.

போவோர் வருவோர் கேளிரென்று - அவர்
கேலிக்கூத்தை பொறுத்தது போதும்!.
யாதும் எனது ஊரேயென்று,
முகவரியின்றி திரிந்தது போதும்!!.

தரணியாண்ட தமிழர் நாம் -
ஒவ்வொருவரும் மறப்புலியே!.,
தனித்திருந்தால் தேசமில்லை -
ஒன்றிணைவோம் வா வெளியே!!.

எழுதியவர் : ஈ.ரா. (17-Jan-14, 8:55 pm)
பார்வை : 133

மேலே