புறா
புறா
ஒவ்வொரு முறை
கோவில் வரும் போதும்
புறா தேடியே
மனம் பறக்கிறது !
சந்தனக் கமகமப்பு
புஷ்பமணம் ,கற்பூரம்
பன்னீர் ,ஊதுபத்தி
தீபமெரியும் திரிமணம்
இன்ன பிற
கோவில் மனம் தாண்டி
புறா மனம் தேடியே
மனம் பறக்கிறது !
பிரகாரங்கள் எங்கும்
இது வரை கண்டதில்லை
ஜோடியற்ற ஒற்றைப்புறா !
அலகோடு அலகுகொத்தி
மூக்கோடு மூக்குரசி
பிரியத்தில் நெக்குருகி
அதன்
'குக்குர்கூ ' சத்தம்
மந்திர உச்சாடனங்களையும்
அர்ச்சக அர்ச்சனைகளையும்
தாண்டி
பிரகாரச் சுற்றெங்கிலும்
புறப் பிரியமற்ற
புறாப் பிரியம்
காதில் பாசுரமாய்
வந்தொலிக்கதான் செய்கிறது
வலம் வரும்வரை !
பொன் அலகால்
மென் றக்கை கலைத்து
தினமும்
உதிர்க்கும் சிற்றிறகு பூவால்
சிலையர்ச்சனை செய்யும்
ஆத்திகப் பெருமையோ
வெண் எச்சம் கழித்து
சிலை யசிங்கம் செய்யும்
நாத்திகக் குமுறலோ
எந்தப் பிரக்ஞையுமின்றி
உள்ளும் புறமும்
ஒன்றாயிருக்கும்
புறா ஞானம்
கலைக்கத்தான் செய்கிறது
கோவிலின் மோன தவத்தை !
கால்கள் பிரகாரம் சுற்றும்
போதெல்லாம்
மனம் கேள்வி சுற்றுகிறது !
ஏன்
எந்த தெய்வமும்
புறா வாகனம் கொள்வதில்லை ?
ஏன் எந்த வேடனும்
கோவிலில் புறா கொல்வதில்லை ?
மென் புறாவின்
கனமற்ற கனம்
மாமிசம் தந்த சிபியறிவான்
வந்தமரும்
தெய்வச் சிலையறியுமா ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
